திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்த ஹீரோவின் நடிப்பில் மயங்கி, ஒருவர், ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்று டி.ஜி.பி. பதவிக்கு உயர முடியுமா?

முடியும் என்பதற்கு உதாரணம் – அனில் குமார் ரதூரி.

1987 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எஸ். ‘பேட்ஜில்’ தேர்வு பெற்று உத்தரகாண்ட் காவல்துறை தலைவர் பொறுப்புக்கு உயர்ந்தவர் அவர். டி.ஜி.பி. பதவியில் இருந்து ஓய்வு பெறுவதை முன்னிட்டு டேராடூனில் அனில் குமாருக்கு நேற்று பிரிவு உபச்சார விழா நடந்தது.

அதில் பங்கேற்று பேசிய அவர் “கோவிந்த் நிகாலனி டைரக்‌ஷனில் வெளிவந்து தேசிய விருது பெற்ற ‘அர்த் சத்யா’ படம் தான், நான் போலீஸ் இலாகாவில் சேருவதற்கு காரணம்” என்று குறிப்பிட்டார்.

“அந்த படத்தில் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருந்த ஓம்புரியின் நடிப்பில் என்னை பறி கொடுத்தேன். அந்த படத்தை பார்த்த பிறகு தான், வேறு எந்த வேலைக்கும் செல்லக்கூடாது. போலீஸ் வேலைக்குத்தான் செல்ல வேண்டும் என தீர்மானமாக முடிவு எடுத்தேன்” என டிஜி.பி.அனில் குமார் தெரிவித்தார்.

– பா. பாரதி