டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 1431 ஆக உயர்ந்துள்ளது. இருதுவரை 488 பேர் குணமடைந்துள்ளனர். ஒமிக்ரான் பாதிப்பு நேற்றை விட மேலும் 161 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரான் பாதிப்பில் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலும் அதிகரித்து வரும் நிலையில், பிறழ்வு வைரசான ஒமிக்ரான் தொற்று பரவலும் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு (2021) நவம்பர் மாதம் 24-ந் தேதி தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் தென்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் 2ந்தேதி இந்தியாவில் பரவியது. முதன்முதலாக வெளிநாட்டில் இருந்து கர்நாடக மாநிலம் வந்த 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியானது. அதைத் தொடர்ந்து, தற்போது, தமிழ்நாடு உள்பட 23 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவி உள்ளது. இதன் காரணமாக, நாடு முழுவதும் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள ஒமிக்ரான் பாதிப்பு குறித்து, மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. அதன்படி, இந்தியாவில் இதுவரை 1,431 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. நேற்று ஒமிக்ரான் பாதிப்பு 1,270 ஆக இருந்த நிலையில், இன்று 1,431 ஆக அதிகரித்துள்ளது. அதே வேளையில் ஒமிக்ரான் பரவலில் இருந்து 488 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 943 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக மகாராஸ்டிரா மாநிலத்தில் 454 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதையடுத்து 2வது இடத்தில் தலைநகர் டெல்லி உள்ளது. டெல்லியில் 351 பேரும், தமிழ்நாட்டில் 118 பேருக்கும், குஜராத் -115, கேரளா -109, ராஜஸ்தான் -69 பதிவாகி உள்ளது.
நாடு முழுவதும் ஒமிக்ரான் பாதிப்பில் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் 118 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ள நிலையில், அவர்களில் 40 பேர் குணமடைந்துள்ளனர்.