வாஷிங்டன்

மிக்ரான் டெல்டா வைரசைப் போல் மோசமான பாதிப்புக்களை உருவாக்கவில்லை என அமெரிக்கச் சுகாதார நிபுணர் ஃபாசி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் உருமாறி பல்வேறு வகைகளில் பரவி வருகின்றது.  அவை ஆல்ஃபா, பீடா, டெல்டா, காமா என பல்வேறு பெயர்கள் கொண்டுள்ளன.  சமீப காலமாக உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான பாதிப்பு அதிகரித்து வருகிறது.  தென் ஆப்ரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டு தற்போது இந்திய உள்ளிட்ட பல உலக நாடுகளில் பரவி உள்ளது.

இந்நிலையில் அமெரிக்க சுகாதார நிபுணரான ஃபாசி செய்தியாளர்களிடம்,  “நாம் ஒமிக்ரான் பற்றி இன்னும் அதிகமாக ஆராய வேண்டி உள்ளது.  இதுவரை கிடைத்த தகவலின்படி ஒமிக்ரான் வைரஸ் டெல்டா போன்ற மற்ற வைரஸ்களை போல் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. இதுவரை கிடைத்த தகவல்களின்படி ஒமிக்ரான் வைரஸ் டெல்டாவை விட மோசமானது அல்ல எனவே கூற வேண்டும்.

ஒமிக்ரான் பரவலில் இது ஆரம்பக் காலம் தான் என்பதால் நாம் மிக மிக ஜாக்கிரதையாக இருந்து ஒமிக்ரான் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்துத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.  அத்துடன்  ஒமிக்ரான் வைரஸால் தடுப்பூசிகள் அளிக்கும் பாதுகாப்பை முழுமையாக ஓரங்கட்டிவிடும் என்பதும் உறுதியாகவில்லை.  தற்போது புழக்கத்தில் உள்ள தடுப்பூசிகள் இதுவரை உருவான அனைத்து வகை உருமாறிய கொரோனா வைரஸ்களையும் எதிர்கொள்வதில் திறன் கொண்டதாக உள்ளது.

ஒமிக்ரானின் ஸ்பைக் புரதத்தில் மட்டுமே 30 வகையான உருமாற்றங்கள் இருப்பதால், இப்போதுள்ள தடுப்பூசிகள் அத்தனையையும் எதிர்க்கின்றனவா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். நிச்சயமாக ஒமிக்ரானால் தடுப்பூசியை முழுமையாகப் பலனற்றதாக செய்ய இயலாது என்றே தெரிகிறது.

கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள இப்போதைக்கு ஒரே ஒரு பேராயுதம் தடுப்பூசி மட்டுமே.  தவிர முகக் கவசம், சமூக இடைவெளியும் அவசியம். கொரோனா வைரஸ் அதன் தன்மையை இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை. அதன் வீரியத்தில் மாற்றம் இருக்கிறதே தவிரத் தன்மையில் மாற்றமில்லை ” என்று கூறி உள்ளார்.