தொற்றுநோயைத் தூண்டும் மோசமான ஆரோக்கியமற்ற தயாரிப்புகளை ஸ்பான்சர்ஷிப் மூலம் உலகெங்கும் கோடிக்கணக்கான விளையாட்டு ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் கோகோ கோலா நிறுவனத்துடனான உறவை ஒலிம்பிக் கமிட்டி துண்டிக்க வேண்டும் என்று சுகாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC)ன் தலைவர் தாமஸ் பாக், “உலகெங்கும் ஆரோகியமான சமூகத்தை உருவாக்க விளையாட்டுத் துறையினர் தயாராக இருப்பதாக” கூறியுள்ளார். ஆனால் ஒலிம்பிக் கமிட்டி மற்றும் கோகோ கோலாவுடனான உறவு அவரது இந்த பேச்சுக்கு மாறாக உள்ளது என்று சர்வதேச பொது சுகாதார அமைப்பான Vital Strategies நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து BMJ பத்திரிக்கையில் அவர்கள் வெளியிட்டிருக்கும் தகவலில், 1928ம் ஆண்டு முதல் சுமார் 100 ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டி மூலம் தனது தயாரிப்புகளை உலகம் முழுக்க கொண்டு சேர்ப்பதில் கோகோ கோலா நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது.

21 விதமான விளையாட்டு போட்டிகளை நடத்தும் 233 அமைப்புகள் மற்றும் சம்மேளனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள கோகோ கோலா நிறுவனத்தின் மிகப்பெரிய ஒப்பந்தம் இந்த ஒலிம்பிக் போட்டிகளாகும்.

2032 வரை அதாவது அடுத்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கும் கோகோ கோலா நிறுவனம் ஸ்பான்சராக உள்ளது.

ஒலிம்பிக் போட்டி மைதானம் தவிர அனைத்து இடங்களிலும் கோகோ கோலா தனது இருப்பை காட்டிக் கொள்ளும் நிலையில் உடல் பருமன், type 2 நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் ஆகியவற்றுடன் தொடர்புடைய சர்க்கரை பானங்களை ஒலிம்பிக் போட்டிகள் மூலம் உலகெங்கும் எடுத்துச் செல்கிறது.

2021 ஆம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோகோ கோலா பாட்டில்களை ஒதுக்கி வைத்த உதாரணத்தை அது மேற்கோளிட்ட நிபுணர்கள், சுமார் 10,000க்கும் அதிகமான விளையாட்டு வீரர்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் தனது விளம்பர தூதர்களாக கோகோ கோலா நிறுவனம் பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினர்.

தவிர தங்களுக்கு இருக்கும் பின்தொடர்பாளர்களை வைத்து ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களையும் அந்நிறுவனம் வளைத்துப்போட்டு வருவதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர்.

கோகோ கோலாவுடனான தனது உறவை ஒலிம்பிக் கமிட்டி தொடர்வதன் மூலம், மோசமான ஊட்டச்சத்து, சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றின் உலகளாவிய தொற்றுநோயை தீவிரப்படுத்துவதில் ஒலிம்பிக் இயக்கம் உடந்தையாக இருந்துவருவதாகத் தெரிவித்துள்ளனர்.