ரியோடி ஜெனீரோ:
ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவுபெறுகின்றன.
31வது ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 5ம் தேதி பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீரோ நகரில் துவங்கியது. 17 நாட்களாக நடந்து வரும் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. நிறைவு விழா நிகழ்ச்சிக்கு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நிறைவு விழா இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு துவங்கும். இவ்விழாவில் 3 ஆயிரம் தன்னார்வலர்கள் மற்றும் 200 நடிகர்கள் கலந்து கொள்ள இருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் லியோனார்டோ கேடானோ தெரிவித்துள்ளார்.
நிறைவு விழா மரகானா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. அந்த மைதானத்தில் 78 ஆயிரத்து 838 பேர் அமர்ந்து நிகழ்ச்சியை கண்டு களிக்கலாம்.
இந்நிலையில் இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டு கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் மரியோ அன்ட்ரடா கூறுகையில், நிறைவு விழாவுக்கான டிக்கெட்டுகளில் இதுவரை 41 ஆயிரத்து 233 விற்பனையாகிவிட்டது. மேலும் பலர் தற்போது டிக்கெட் வாங்கி வருகிறார்கள்” என்றார்.
பிரேசிலை சேர்ந்த சூப்பர் மாடலான ஜிசல் பன்ட்சென் ராம்வாக் செய்ய உள்ளார். அதே போல அந்நாட்டு முன்னாள் கால்பந்தாட்ட வீரரான பீலே நிறைவு விழாவில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.