
வேதாரண்யம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு கார் உள்ளிட்ட பரிசுகள் அளித்து அசத்தியுள்ளனர் முன்னாள் மாணவர்கள்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ளது ஆயக்காரன்புலம்-3சேத்தி கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஆனந்தராசு ஆயக்காரன்புலம் இரா. நடேசனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி, நேற்று ஓய்வுபெற்றார். அதற்கு முன்பு அவர், கே.டி.சி என்ற பெயரில் டியூஷன் சென்டர் நடத்திவந்தார். இதில் படித்த மாணவர்கள் பலர், மருத்துவர், பேராசிரியர், பொறியாளர் எனப் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார்கள்.
அவர்களில் 167 பேர் ஒன்று சேர்ந்து, தங்கள் உயர்வுக்குக் காரணமான `ஆர்.ஏ சார்’ என்று அழைக்கப்படும் ஆனந்தராசு ஓய்வுபெறும் நாளை சிறப்பாகக் கொண்டாட முடிவுசெய்தனர்.
ரூ.8 லட்சத்தில் கார், 3 சவரன் செயின், 10 விரல்களுக்கு தங்க மோதிரங்கள் கொடுத்து, மலர்க் கிரீடம் சூட்டி கவுரவித்தார்கள். மேலும் விழாவுக்கு வந்த அனைவருக்கும் மதிய விருந்து அளித்தார்கள்.
ஏற்புரையின்போது ஆனந்தராசு,` மாணவர்களால் தான் வாழ்ந்தேன், வாழ்கிறேன். முன்பு படித்த மாணவர்களுக்கும், தற்போது படிக்கும் மாணவர்களுக்குமிடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஆசிரியர், மாணவர் உறவு மேம்பட வேண்டும். ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட வேண்டும்’ என்று பேசினார்.
[youtube-feed feed=1]