கொல்கத்தா:
மோடி பேரணிக்கு லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்தது போன்ற மாயை உருவாக்க, பழைய படத்தை இணைத்து வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சாரதா சிட் ஃபண்ட் வழக்கில் சிபிஐ நடவடிக்கையை அடுத்து மத்திய அரசுக்கும் மேற்கு வங்க அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அந்த பேரணியில் லட்சக் கணக்கான மக்கள் திரண்டு வந்தது போல் காட்டுவதற்காக, பழைய படங்களை இணைத்து சமூக வலைதளங்களில் பாஜகவினர் பதிவிட்டுள்ளனர்.
பொதுவாக கூட்டம் இல்லை என்றால் பேரணி ரத்தாகும். ஆனால் கட்டுப்படுத்தமுடியாத அளவுக்கு கூட்டம் திரண்டதால், தனது பேச்சை சிறிது நேரத்திலேயே மோடி முடித்துக் கொண்டார் என அந்த படத்துக்கு கீழே குறிப்பிட்டுள்ளனர்.
கூகுளில் தேடிப் பார்த்தபோது இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. முதல் படம் கடந்த 2014 மே 15 எடுக்கப்பட்டது என கூகுள் காட்டுகிறது. 2-வது படம் எங்கு எடுத்தது என்று கண்டறிய முடியவில்லை.
3-வது படம் கடந்த 2014-ல் கர்நாடக பாஜகவின் முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நான்காவது படம் 2014-ல் கொல்கத்தாவில் பிரதமர் மோடி கலந்து கொண்ட பேரணியின் படம். தேஷ் குஜராத் இணையத்தில் கட்டுரையுடன் இந்த படம் பிரசுரமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நரேந்திர ‘மோடி ஃபார் பிஎம்’ என்ற முகநூல் பக்கத்தை ரோகித் கங்காவல் என்பவர் கையாளுகிறார். இவர் பாஜகவுக்கு நெருக்கமானவர் என்பது தெரியவந்துள்ளது.