புதுக்கோட்டை: ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் சங்கம் தமிழகஅரசை வலியுறுத்தி உள்ளது. மேலும், அக்டோபர் 28ஆம் தேதி சென்னையில் மாநில அளவில் ஆர்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியம் (CPS) ரத்து செய்யப்பட்டு, அவர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் (OPS) கொண்டு வரப்படும் என்று 2021 சட்டமன்ற தேர்தலின்போது திமுக வாக்குறுதி அளித்திருந்தது. இதேபோன்று திமுக ஆட்சிக்கு வந்தால், அரசுப் பள்ளிகளில் பணியாற்றிவரும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தது. இதனால், 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டும் என்று ஆவஸோடு எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டு காலமாகியும், அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதுதொடர்பாக ஆசிரியர்கள், அரசுஊழியர் சங்கங்கள் பலமுறை திமுக அரசுக்கு நினைவுபடுத்தியதும், எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.  இது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் ஜாக்டோ ஜியோவின் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கையான  பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுகுறித்த எந்தவொரு தகவலையும் ஸ்டாலின் பேசவில்லை.

இதனால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முதல்வர் ஸ்டாலின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில்,  புதுக்கோட்டையில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் பதிவு உயர்வில் 40 சதவீதம் முதல் 50 சதவீதமாக உயர்த்தி பதவி உயர்வு வழங்க வேண்டும். அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் துப்புரவாளர்கள் மற்றும் இரவு காவலர்கள் உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும் 8 பட்டதாரி ஆசிரியர்கள் பணியமற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் அன்பரசன், பள்ளிக் கல்வித் துறையில் நிலவிவரும் பல்வேறு குளறுபடிகளை கண்டித்தும் பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் மற்றும் அமைச்சர் முரண்பட்ட கருத்துக்களை கூறி வருவதை உடனடியாக முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும். சில பகுதிகளில் வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுகளை ஆசிரியர்கள் மீது வைக்கின்றனர் அது தவிர்க்கப்பட வேண்டும்  என்று அன்பரசன் தெரிவித்தார்.

மேலும்,  பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 28ஆம் தேதி சென்னையில் மாநில அளவில் ஆர்பாட்டம் நடைபெறும் என்றும் கூறினார்.