சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தகோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு அரசின் நிதித்துறை செயலாளர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
மத்திய பாஜக அரசு கடந்த 2003ம் ஆண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்தியதுடன் , அதற்குப் பதிலாக 2004ஆம் ஆண்டு தேசிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி வருகின்றனர்.
2003 ஆம் ஆண்டில், அடல் பிஹாரி வாஜ்பாய் அரசு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, 2004 அம் ஆண்டில் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியபோது, பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆனால், இன்றுவரை, ஒரு தரப்பினர் பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஆதரிக்கும் நிலையில், மற்றொரு பிரிவினர் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ஆதரித்து வருகின்றனர். அதுபோல எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளும் வாக்கு வங்கிக்காக அரசு ஊழியர்களிடையே பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவோம் என்று கூறியதுடன், சில மாநிலங்களில் மீண்டும் பழைய ஒய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், அம்மாநிலங்கள் கடுமையான நிதிச்சுமையில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், திமுக அரசும் கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவோம் என்று கூறியிருந்தது. ஆனால், நிதிச்சுமை காரணமாக இதுவரை அமல்படுத்தவில்லை. இதுகுறித்து அவ்வப்போது அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர்.
இதற்கிடையில், வேடசந்தூரை சேர்ந்த பிரடெரிக் ஏங்கல்ஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீதான விசாரணை நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வில் நடைபெற்றது. அப்போது மனுதாரர் மற்றும் அரசு தரப்பு வாதங்களை ஏற்ற நீதிபதிகள், மனு தொடர்பாக தமிழ்நாடு நிதித்துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை 2 வார காலம் தள்ளி வைத்தது.