காங்கிரஸ் கட்சியை சொந்தக் கட்சியினரே சிறுமைப்படுத்தி சிதறடிக்கப் பார்க்கிறார்கள்.
தேசம் ஒரு கட்சியின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாவதைத் தடுக்க காங்கிரஸ் கட்சியின் தலைமையை ராகுல் காந்தி உடனடியாக ஏற்க வேண்டும் என்று சாம்னா பத்திரிக்கையில் தலையங்கம் வெளியிட்டிருக்கிறது சிவசேனா.
கட்சிக்குள் இருந்துகொண்டு தலைமையை விமர்சனம் செய்யும் நிர்வாகிகள் அவர்களின் சொந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில் சிவசேனாவின் இந்த கட்டுரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பலவீனமடைந்திருக்கும் நூற்றாண்டு பழைமை வாய்ந்த காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்டும் முயற்சியில் ராகுல் காந்தி ஈடுபட்டிருக்கும் நிலையில் பதவி சுகம் அனுபவித்து கொழுத்த பழம்பெருச்சாளிகள் இப்போது ராகுல் காந்தி தலைமை பொருப்புக்கு வருவதைத் தடுக்க பாஜக-வுடுன் கள்ள உறவு வைத்திருக்கின்றனர்.
யாருடன் போராட வேண்டும் என்ற வழிகாட்டுதல் இல்லாமல் தலையில்லாத உடலாக இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தலை போல் இருந்து ராகுல் காந்தி உயிர்ப்பிக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளது.
மேலும், பதவி சுகம் அனுபவித்துவிட்டு துரோகம் இழைப்பவர்களால் கட்சி சிதறாமல் இருக்க காங்கிரசுக்கு முழுநேர சீறிய தலைமை ஒன்று அவசியம் என்றும் நாட்டில் கொழுத்திருக்கும் வஞ்சகத்தை வீழ்த்த ராகுல் காந்தி உடனடியாக தலைமை ஏற்பதே சிறந்த தீர்வாக அமையும் என்றும் கூறியுள்ளது.