டில்லி
டில்லியில் ஒரு பழைய ஏர் இந்தியா விமானம் நடை மேம்பாலத்துக்குக் கீழே சிக்கி மீட்புப் பணிகள் நடக்கின்றன.
பொதுவாக சாலைகளில் உள்ள மேம்பாலங்களின் கீழ் கனரக வாகனங்கள் சிக்கும் சம்பவம் நிகழ்வதுண்டு. இதுவே அவ்வப்போது பரபரப்பைக் கிளப்புவது வழக்கமாகும். தலைநகர் டில்லியில் ஒரு மேம்பாலத்தின் கீழ் ஏர் இந்தியாவின் விமானம் ஒன்று சிக்கியதும் அதனால் சாலை போக்குவரத்து முடங்கி மீட்புப் பணிகள் நடப்பதும் புதுமையான ஒன்றாகும்.
டில்லியில் பரபரப்பான சாலை ஒன்றில் மேம்பாலத்துக்குக் கீழ் ஏர் இந்தியா விமானம் ஒன்று சிக்கிக் கொண்டு நிற்கும் காட்சி சமூக வலைத் தளங்களில் வெளியாகியது. இதனால் போக்குவரத்து தடைப் பட்டு மீட்புப் பணிகள் நடப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன. மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய இது குறித்து ஏர் இந்தியா தகவல் வெளியிட்டுள்ளது.
அதில் “ஏர் இந்தியாவின் காலாவதியான பழைய விமானம் ஒன்று விற்பனை செய்யப்பட்டு அதை வாங்கியவர் நேற்று இரவு ஒரு கனரக வாகனம் மூலம் எடுத்துச் சென்றுள்ளார் ஆனால் வாகன ஓட்டுநரின் தவறான கணிப்பால் விமானம் நடை மேம்பாலத்துக்குக் கீழ் சிக்கி மேலே செல்ல முடியாமல் நின்றுள்ளது. ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டதால் இதற்கும் எமது நிறுவனத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.