டில்லி

ன்லைன் வாடகைக்கார் நிறுவனங்களான ஓலா மற்றும் உபர் டாக்சி கட்டண கமிஷன் தொகையை 10% ஆகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போது நாட்டில் காற்று மாசு மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.   குறிப்பாக தற்போது பலர் சொந்த வாகனங்களில் செல்லும் போது வாகன எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.   இதைக் குறைக்க அரசு கூடியவரைப் பேருந்து போன்ற பொது போக்குவரத்து  மற்றும் வாடகைக்கார் ஆகியவற்றைப் பயன்படுத்த ஆலோசனை அளிக்கிறது.   ஆன்லைன் மூலம் இப்போது வாடகைக் கார் ஒப்பந்தம் செய்வது அதிகரித்து வருகிறது.

ஆன்லைன் வாடகைக் கார் நிறுவனங்களில் ஓலா மற்றும் உபர் ஆகிய இரு நிறுவனங்களும் முன்னணியில் உள்ளன.   இந்த வாடகைக் கார்களை உபயோகப்படுத்துவதன் மூலம் 10 சொந்தக் கார் உபயோகத்தைக் குறைக்கலாம் என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  இந்த ஓலா மற்றும் உபர் ஆகிய நிறுவனங்கள் வாடகைக்கார் வைத்துள்ள ஓட்டுனர்களுடன் ஒப்பந்தம் செய்து அவர்களுக்கு ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களை அனுப்பி வைக்கிறது.

இந்த சேவைக்காக அந்நிறுவனத்துக்கு வாகன ஓட்டிகள் தங்கள் வருமானத்தில் இருந்து கமிஷன் அளிக்க வேண்டி உள்ளது.  இவ்வாறு கமிஷன் அளிப்பதால் தங்கள் வருமானம் குறைவதால் தாங்கள் அதிகம் சவாரிகள் செய்ய வேண்டி உள்ளதாக ஓட்டுனர்கள் தொடர்ந்து புகார் எழுப்பி வந்தனர்.  இது குறித்து அவர்கள் போராட்டங்கள் நடத்தி உள்ளனர்.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள  புதிய மோட்டார் வாகனச் சட்டம் 2019 இன் படி, வாடகைக் கார் கட்டணம், நிறுவனத்துக்கு ஓட்டுநர்கள் வழங்க வேண்டிய கமிஷன் தொகை உள்ளிட்ட விவகாரங்களில் அரசு தலையிட முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.   தற்போது இந்த நிறுவனங்களுக்கு ஓட்டுநர்கள் 20% கமிஷன் தொகை வழங்கி வருகின்றனர்.

இதை 10% ஆகக் குறைக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.  இடு குறித்த திட்ட வரைவை அடுத்த வாரம் வெளியிடப்பட்டு பொதுமக்கள், ஓட்டுநர்கள், மற்றும் நிறுவன பிரதிநிதிகளின் கருத்துக்களைக் கேட்டறிய அரசு திட்டமிட்டுள்ளது.   அத்துடன் அடிப்படை கட்டணங்களை அந்தந்த மாநிலம் அமைத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.   இந்த மாறுதல்கள் இந்த வருட இறுதிக்குள் செயல்படுத்தப் பட உள்ளதாக கூறப்படுகிறது.