தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து தனது முதல் ஸ்கூட்டரை இன்று அறிமுகம் செய்தார் அந்நிறுவனத் தலைவர் பவேஷ் அகர்வால்.

500 ஏக்கர் நிலத்தில் 2400 கோடி ரூபாய் முதலீட்டில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய வகையில் அமையவிருக்கும் இந்த தொழிற்சாலையின் முதல் கட்ட கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமி பூஜையுடன் துவங்கியது.

ஆறே மாதத்தில் கட்டாந்தரையாக இருந்த இடத்தில் தொழிற்சாலை அமைத்து சுதந்திர தினமான இன்று தனது முதல் ஸ்கூட்டரை அறிமுகப் படுத்தியிருக்கிறது.

எஸ் 1 – எஸ் 1 ப்ரோ என்று இரண்டு வடிவமைப்பில் வர இருக்கும் இந்த ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் பற்றி அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல் :

எஸ் 1 மாடல் வண்டிகள் மணிக்கு அதிகபட்சமாக 90 கி.மீ வேகம் செல்லமுடியும், 3.6 வினாடிகளில் பூஜ்யத்திலிருந்து 40 கி.மீ வேகத்தை எட்டக்கூடிய இந்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 121 கி.மீ. வரை செல்லமுடியும், இதன் விலை ரூ. 99,999.

எஸ் 1 ப்ரோ வண்டிகள் மணிக்கு அதிகபட்சமாக 115 கி.மீ வேகம் செல்லமுடியும், 3 வினாடிகளில் பூஜ்யத்திலிருந்து 40 கி.மீ வேகத்தை எட்டக்கூடிய இந்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 181 கி.மீ. வரை செல்லமுடியும், இதன் விலை ரூ. 1,29,999.

3.92 கிலோ வாட் பேட்டரிகள் பொருத்தப்பட்டிருக்கும் இவ்விரு மாடல்களும் அந்தந்த மாநில அரசு வழங்கும் மானியத்திற்கு ஏற்ப கணிசமாக விலை குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலை முழுஅளவில் செயல்படும்போது ஆண்டொன்றுக்கு 1 கோடி ஸ்கூட்டர்கள் தயாரிக்க முடியும் என்று கூறப்படும் நிலையில், ரூ. 499 க்கு இந்த ஸ்கூட்டரை முன்பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது.

முன்பதிவுக்கான அழைப்பு விடுக்கப்பட்ட 24 மணி நேரத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகள் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.