ஓக்லஹோமா:
அமெரிக்காவின் ஓக்லஹோமா நாட்டில் ஆசிரியர்களுக்கு 6,100 டாலர் வரை சம்பளம் உயர்த்தி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இது நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஊதிய உயர்வு போதாது என்று கூறி ஆசிரியர் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. நாட்டின் வரலாற்றிலேயே இவ்வளவு அதிக ஊதிய உயர்வு இது தான் என்று அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு மற்றும் கல்விக்கு நிதி ஒதுக்கீடு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர் ஊதியத்தில் ஓக்லஹோமா 49வது இடத்தில் உள்ளது என்று தேசிய கல்வி சங்கம் தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் வாஷிங்டன், மிஸ்சிஸ்பி, தெற்கு டகோதா ஆகியவை இதற்கு கீழ் வருகிறது. மேற்கு விர்ஜினாவில ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி ஊதிய உயர்வை பெற்றுவிட்டனர். இதை தொடர்ந்து தான் ஓக்லஹோமா மற்றும் அரிசோனாவில் போராட்டம் வெடித்தது.
ஒக்லஹோமாவில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் 41,150 டாலர், நடுநிலைப் பள்ளி ஆசிரியர் 42,380 டாலர், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் 42,460 டாலர் ஊதியம் பெறுகின்றனர். ஓக்லஹோமா கல்வி சங்கம் என்பது அந்நாட்டில் மிகப்பெரிய சங்கமாக உள்ளது. இதில் ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் என 40 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்கம் தான் ஊதிய உயர்வு போதாது என்று தெரிவித்துள்ளது.
இதையடுத்து இன்று (திங்கள் கிழமை) முதல் ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்திருந்தது. இதன் காரணமாக இன்று அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு 10 ஆயிரம் டாலர் வரை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். இதர ஊழியர்களுக்கு 5 ஆயிரம் டாலர் வரை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.