திருவனந்தபுரம்:
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ‘ஒகி‘ புயல் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரளா கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது.
இந்த புயல் கேரளாவை கடந்து பின்னர் அரபி கடல் வழியாக அங்கிருந்து லட்சத் தீவை நோக்கி சென்றது. அப்போது மணிக்கு 80 கிலோ மீட்டர் வேக காற்றுடன் பலத்த மழை கொட்டியது. லட்சத் தீவின் தலைநகரான கவரட்டியிலும், மினிகாய் தீவிலும் அதிகபட்சமாக 14 செ.மீ. மழை பெய்தது.
கன மழை காரணமாக கல்பேனி தீவில் கடலின் நீர்மட்டம் திடீரென உயர்ந்தது. 6 மீன் பிடி படகுகள் சேதமடைந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. தொலைத் தொடர்பு, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல வீடுகளும் இடிந்தன.
இந்நிலையில் ஒகி புயல் காலை லட்சத்தீவில் இருந்து மேற்கு -வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. இந்த புயல் தீவிரமடைந்து நாளை காலை வடகிழக்கு பகுதியை நோக்கி அதாவது குஜராத் பக்கம் திரும்பும். அப்போது அதிக பட்சமாக மணிக்கு 145 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் காற்றின் வேகம் படிப்படியாக குறையும். கேரள கடலோர பகுதியில் கடல் சீற்றம் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.