கண்ணூர்
இதுவரை இந்தியாவில் நடந்த ஊழல்களில் தேர்தல் பத்திர ஊழலே மிகப்பெரியது எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறி உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி கேரளாவில் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்து கண்டன பொதுக்கூட்டங்கள் நடந்து வருகின்றன. இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் நடந்து வரும் இந்த கூட்டங்களில் முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டு பேசி வருகிறார்.
அவ்வகையில் கண்ணூரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது அவர்,
” நாட்டின் அரசியலமைப்பு நிறுவனங்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க சங் பரிவார் அமைப்புகள் முயல்கின்றன. நாட்டின் நீதித்துறையைக் கூட மிரட்டுகின்றன. தேர்தல் பத்திர விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு தங்களைப் பாதித்திருக்கிறது என்பது மத்திய அரசு, பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகளுக்கு நன்கு தெரியும். ஆகவே இந்த பிரச்சினையைத் திசை திருப்ப அவர்கள் டில்லி முதல்வ கெஜ்ரிவாலைக் கைது செய்து உள்ளனர்.
தேர்தல் பத்திரங்கள் பற்றிய யோசனை முன்வைக்கப்பட்டபோதே, அது ஊழலுக்கான கருவியாக இருப்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதுவரை இந்தியா பார்த்துள்ள ஊழல்களிலேயே மிகப்பெரிய ஊழல் தேர்தல் பத்திர முறைகேடு ஆகும். அவர்களுக்கு இப்படி அப்பட்டமாக ஊழலில் ஈடுபட அவர்களுக்கு எப்படி தைரியம் வந்தது?
தாங்கள் ஒருபோதும் விசாரிக்கப்பட மாட்டோம் என்று நினைத்ததுடன் கெஜ்ரிவால் கைதின் மூலம் தாங்கள் சட்டத்துக்கு மேல் என்ற செய்தியைக் கூற முயல்கிறார்கள். தங்கள் செயல்திட்டங்களை நிறைவேற்ற எதையும் செய்வோம் எனக் கூற விரும்புகின்றனர்.
டில்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது சங் பரிவார் அமைப்புகள் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதால் சுமார் 53 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் மாயமாகினர். பாஜக அரசு ஆர்.எஸ்.எஸ். செயல் திட்டமான குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி இருக்கிறது.”
என்று கூறினார்.