டில்லி:

அடுத்த 6 முதல் 8 ஆண்டுகளில் வாகனங்கள் மின்னணு பேட்டரி எரிசக்திக்கு மாறி புரட்சி ஏற்படும் போது ஒரு பாரல் கச்சா எண்ணெய் விலை 10 டாலராக குறையும் என பொருளாதார நிபுணர் கிரைஸ் வாட்லிங் தெரிவித்துள்ளார்.

சிஎன்பிசி டிவிக்கு அவர் அளித்த பேட்டியில் இதை குறிப்பிட்டிருந்தார். அவர் மேலும் கூறுகையில், ‘‘2018ம் ஆண்டின் 2வது அரையாண்டில் எண்ணெய் சந்தையை சவுதி பொது பங்குகளுக்கு திறந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதற்காக சர்வதேச பங்கு சந்தையை தொடங்கி ஒரு பாரல் கச்சா எண்ணெய் விலை 10 டாலரை நெருங்குவதற்குள் இதை நிறைவேற்ற சவுதி திட்டமிட்டுள்ளது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘அடுத்து வரும் வாரங்களிலோ அல்லது மாதங்களிலோ கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கவில்லை. 70 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதனால் மின்னணு வாகனங்களின் தேவை அவசியமான ஒன்றாகிவிட்டது.

120 ஆண்டுகளுக்கு முன் இந்த உலகம் கச்சா எண்ணெயை நம்பி வாழவில்லை. அப்போது கச்சா எண்ணெய் சர்வதேச பொருளாதாரத்தை இயக்கியது கிடையாது. தற்போது மாற்று எரிசக்தி தான் முக்கியம். அது எந்த வடிவில் விரைவில் வந்தாலும் மாற்றத்தை ஏற்றாக வேண்டும். அடுத்த 6 முதல் 8 ஆண்டுகளில் ஒரு பாரல் கச்சா எண்ணைய் விலை 10 டாலர் என்ற நிலையை அடையும்’’ என்றார்.