டில்லி

சாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் உச்சநீதிமன்ற ஆணைக்கு பிறகும் யானைப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளது.

அசாம் மாநிலம் கோலேகாத் மாவட்டத்தில் அமைந்துள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் பல மிருகங்கள் வசித்து வருகின்றன. அடர்ந்த கானகத்தின் நடுவில் அமைந்துள்ள இந்த பூங்காவின் இடையில் நுமாலிகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. அரசு நிறுவனமான இந்த என் ஆர் எல் ஐ கடந்த 1999 ஆம் வருடம் அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தொடங்கி வைத்தார்.

சமீபத்தில் இந்த நிறுவனத்தின் பயோ டீசல் பிரிவுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிறுவனம் குறித்து ஒரு பொது நல மனு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அளிக்கபட்டது. அந்த மனுவில், “என் ஆர் எல் நிறுவனம் காசிரங்கா தேசிய பூங்காவில் உள்ள 20 கிமீ பரப்பளவை சுற்றி 2.2 கிமீ மதில் சுவரை கட்டி உள்ளது. . இந்த வனப்பகுதியில் பல்வகை மிருகங்கள் வசித்து வருகின்றன.

இந்த மதில் சுவர் யானைகள் நடுமாடும் பாதை இடையில் அமைந்துள்ளது. இதனால் யானைகளின் நடமாட்டம் தடைபட்டுள்ளது. எனவே இந்த நிறுவனத்தின் மதில் சுவற்றை இடித்து ஆக்கிரமிப்பை அகற்ற தீர்ப்பாயம் உத்தரவிடவேண்டும்” என கூறப்பட்டிருந்தது.  தேசிய பசுமை தீர்ப்பாயம் அந்த மதில் சுவரை உடனடியாக இடிக்க வேண்டும் என கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 அன்று உத்தரவிட்டது.

பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எண்ணெய் நிறுவனம் மேல் முறையீட்டு மனு அளித்தது. இந்தமனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் ஷா அடங்கிய அமர்வு கடந்த ஜனவரி 18 ஆம் தேதி நிறுவனத்தின் மேல் முறையீட்டு மனுவை ரத்து செய்தது. உடனடியாக இந்த மதில் சுவற்றை இடித்து ஆக்கிரமிப்பை நீக்க வேண்டும் எனும் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இன்று வரை நுமாலிகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் மதில் சுவற்றை இடித்து ஆகிரமிப்பை நீக்காமல் உள்ளது. வனத்துறை அதிகாரி ஜெயஸ்ரீ நாயிடிங் இந்த நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றுமாறு கடந்த மாதம் 14 ஆம் தேதி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்துக்கு இந்த விவகாரம் குறித்து கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளதால் வழக்கு முடியும் வரை மதில் சுவர் இடிக்கப்பட மாட்டாது என நிறுவனம் பதில் அளித்துள்ளது.

இதை ஒட்டி வனத்துறை உச்சநீதிமன்ற உத்தரவில் இந்த சுவர் இடிக்கப்பட வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதால் எண்ணெய் நிறுவனத்துக்கு சுவரை இடிக்க உத்தரவிட வேண்டும் என அசாம் அரசின் தலைமை செயலருக்கு கடந்த மாதம் 20 ஆம் தேதி கடிதம் எழுதி உள்ளது. அசாம் மாநில தலைமை செயலர் இந்த கடிதத்துக்கு இதுவரை பதில் அளிக்கவில்லை. சுவரும் இடிக்கப்படாமல் உள்ளது.

 

THANX : “THE WIRE”