புதுடெல்லி: ரிஷிகேஷின் பர்மார்த் நிகேதன் ஆஷ்ரமத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசியது ஒரு நாகரீகம் நிறைந்த மற்றும் ஆன்மீக உள்ளடக்கம் கொண்ட கருத்து என்றும், வேறு எந்த நாடு தொடர்பாகவோ அல்லது சூழல் தொடர்பாகவோ அவர் பேசவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அஜித் தோவல் சீனா மற்றும் லடாக் பிரச்சினை தொடர்பாகத்தான் அவ்வாறு பேசினார் என்று சில மீடியா செய்திகள் தெரிவித்ததையடுத்து இந்த விளக்கம் தரப்பட்டுள்ளது.
பர்மார்த் நிகேதன் ஆஷ்ரமத்தில் அஜித் தோவல் பேசியதாவது, “நாம் எப்போதும் யாரையும் தாக்கியதில்லை என்று நீங்கள் கூறினீர்கள் மற்றும் அதுதொடர்பாக பல கருத்துக்கள் உள்ளன. அதேசமயம், நம் நாட்டிற்கு ஆபத்து இருந்தால், நமது பாதுகாப்பிற்காக நாம் தாக்க வேண்டியது அவசியம்.
அவசியமில்லை என்றாலும்கூட, நீங்கள் விரும்பினால் நாங்கள் சண்டையிடுவோம். ஆபத்து எங்கிருந்து வருகிறது என்று நாங்கள் உணர்கிறோமோ, அங்கே நாம் சண்டையிடுவோம். நாம் எதையும் சுயநல நோக்கத்திற்காக செய்ததில்லை.
நாம் நமது நிலத்திலும், பிறரின் நிலத்திலும் சண்டையிட்டுள்ளோம். ஆனால், ஒருபோதும் சுயநல காரணத்திற்காக அல்ல; அதேசமயம் பிறரின் உயர்ந்த நலத்திற்காக” என்று பேசினார் தோவல்.