புவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம்.

தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திவைத்த நாட்டின் முதல் மாநிலமாகியுள்ளது ஒடிசா.

நாடெங்கிலும், முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி இன்று துவங்கியது. ஒடிசாவிலும் பலர் முதற்கட்ட டோஸை தங்கள் உடலுக்குள் செலுத்திக் கொண்டனர்.

ஆனால், குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல், கொரோனா தடுப்பு மருந்து செலுத்துவது நிறுத்தப்பட்டது. ஏனெனில், முதல் டோஸ் பெற்றவர்கள், தங்கள் உடலில் என்னவிதமான மாறுதல்களை சந்திக்கிறார்கள் என்பதை அறிந்த பிறகு, எஞ்சிய 3.28 லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கும் அடுத்தகட்டமாக தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவில், 30 மாவட்டங்களில், 161 இடங்களில் தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளன. 51 வயதான பிரான்ச்சி நாயக் என்ற துப்புரவுத் தொழிலாளிதான், அம்மாநிலத்தில் தடுப்பு மருந்தை முதலில் ஏற்றிக்கொண்டார்.