புவனேஸ்வர்

டிசா மாநிலத்தில் 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணியாக ஒடிசா அரசு அதிகரித்துள்ளது.

கொரோனா தாக்கத்தால் பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பு அளவைப் பொறுத்து ஒரு சில பகுதிகளில் ஊரடங்கு விதிகளை தளர்த்திக் கொள்ள மத்திய அரசு மாநில அரசுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.   இதன் அடிப்படையில் ஒரு சில மாநிலங்களில் பணிகள் ஆரம்பித்துள்ளன.   ஊரடங்கால் பல தொழிலகங்கள் மற்றும் வர்த்தகப் பணிகள் இயங்காத நிலையில் உள்ளன.

தற்போது ஊரடங்கு முடிவடைய நேர்ந்தாலும் சமூக இடைவெளி காரணமாகக் குறைந்த தொழிலாளர்களுடன் தொழிலகங்கள் இயங்க வேண்டிய நிலை உண்டாகும்.   எனவே அதிக உற்பத்தியைப்  பெற எட்டு மணி நேரத்துக்கு பதில் 12 மணி நேரப் பணி முறையைக் கொண்டு வர பல மாநிலங்கள் ஆலோசனை செய்தன.  இவற்றுக்குத் தொழிலாளர் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில்  ஒடிசா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தொழிற்சாலை விதிகள் 1948 இன் கீழ் வரும் அனைத்து தொழிற்சாலைகளிலும் ஒடிசா அரசு அனைத்து தொழிலாளர்களுடைய பணி நேரத்தை நடுவில் விடப்படும் இடைவெளியை 12 மணி நேரமாக மாற்றி அமைக்கிறது. ஒரு வாரத்துக்கு அனைத்து தொழிலாளர்களும் 12 மணி நேரத்துக்கு அதிகமாகவோ அல்லது வாரத்துக்கு 72 மணி நேரத்துக்கு அதிகமாகவோ பணி புரிய அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி ஒரு வயது வந்த தொழிலாளி ஒவ்வொரு நாளும் ஆறு மணி நேரத்துக்குக் குறையாமல் ஒரு நேரமும் அடுத்த நேரத்தில் மீதமுள்ள அறு மணி நேரமும் பணி புரிய வேண்டிய நிலை ஏற்படுகிறது.   இந்த ஆறுமணி நேரத்துக்கு இடையில் குறைந்தது அரைமணி நேரம் இடைவேளை விடப்படுகிறது.  மொத்த நேரம் இடைவேளையுடன் 13 மணி நேரத்துக்குள்ளாக இருக்க வேண்டும் என உள்ளது.

மேலும் இந்த உத்தரவின்படி தொழிற்சாலைகளில் பெண் தொழிலாளர்கள் மாலை 7 முதல் காலை 6 மணி வரை அரசின் ஒப்புதல் இன்றி பணிபுரிய அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.   அதிகப்படியான 4 மணி நேரப்பணிக்கு ஓவர்டைம் ஊதியம் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.   மேலும் இந்த ஓவர்டைம் ஒரு வாரத்துக்கு 24 மணி நேரத்துக்கு அதிகமாக இருக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு சிஐடியு தொழிற்சங்க தலைவர் ஜனார்த்தன் பட்டி, “இந்த வேலை நேரம் அதிகரிப்பு நமது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.  ஏற்கனவே ஊரடங்கால் துயருற்றுள்ள தொழிலாளர்களை மேலும் 4 மணி நேரம் பணி  புரியச் சொல்வதில் எந்த நியாயமும் கிடையாது.  வாரத்துக்கு 72 மணி நேரப் பணி தொழிலாளர்களின் உடல்நிலையைச் சீர்கெடச் செய்யும்” எனத் தெரிவித்துள்ளார்.