லண்டன்: இந்திய இணைய நிறுவனம் ஒன்று, உலகெங்கிலும் உள்ள அரசியல்வாதிகள், முதலீட்டாளர்களை உளவு பார்த்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லியை தளமாகக் கொண்ட பெல்ட்ராக்ஸ் இன்ஃபோடெக் சர்வீசஸ் என்ற அந்த நிறுவனம் தான் இந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறது. அதாவது ஐரோப்பாவில் உள்ள அரசு அதிகாரிகள், பஹாமாஸில் சூதாட்ட அதிபர்கள் மற்றும் தனியார் ஈக்விட்டி நிறுவனமான கே.கே.ஆர் மற்றும் குறுகிய விற்பனையாளர் மடி வாட்டர்ஸ் உள்ளிட்ட அமெரிக்காவில் நன்கு அறியப்பட்ட முதலீட்டாளர்களை குறிவைத்து இந்த நிறுவனம் உளவு பார்த்திருப்பதாக தெரிகிறது.
7 ஆண்டுகளில் 10,000 க்கும் மேற்பட்ட மின்னஞ்சல் கணக்குகளை உளவு பார்க்க வாடிக்கையாளர்களுக்கு உதவ இந்த தொழில்நுட்ப நிறுவனம் தனது ஹேக்கிங் சேவைகளை வழங்கியது.
அமெரிக்க நிறுவனங்களை குறி வைத்த பெல்ட்ராக்ஸின் ஹேக்கிங் ஸ்பிரீயின் அம்சங்கள் தற்போது அந்நாட்டு சட்ட அமலாக்கத்தால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவல்களை பிரபல செய்தி நிறுவனமாக ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது. ஆனால் இது குறித்த விவரங்களை பற்றி அமெரிக்க நீதித்துறை கருத்து தெரிவிக்க மறுத்திருக்கிறது.
ஆனால் உளவு பார்த்த பெல்ட்ராக்ஸின் வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கும் தெரியாது. இது தொடர்பாக அந்நிறுவன உரிமையாளர் சுமித் குப்தாவை அணுகிய போது எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளார்.
மடி வாட்டர்ஸ் நிறுவனர் கார்சன் பிளாக் கூறுகையில், பெல்ட்ராக்ஸின் வாடிக்கையாளரால் ஹேக்கிங் செய்ய நாங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளோம் என்பது ஏமாற்றமே. ஆனால் ஆச்சரியம் ஒன்றுமில்லை என்றார். ஆனால் இது குறித்து கருத்து தெரிவிக்க தனியார் ஈக்விட்டி நிறுவனமான கே.கே.ஆர் மறுத்துவிட்டது.
ஹேக்கர்கள் பயன்படுத்திய உள்கட்டமைப்பை வரைபடமாக்க இணைய கண்காணிப்புக் குழுவான சிட்டிசன் ஆய்வகத்துக்கு 2 ஆண்டுகள் தேவைப்பட்டன. இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டனர்.
இது இதுவரை வெளிப்படுத்தப்பட்ட மிகப்பெரிய உளவு நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்று சிட்டிசன் ஆய்வக ஆராய்ச்சியாளர் ஜான் ஸ்காட் ரெயில்டன் கூறினார்.
யார் இலக்கு வைக்கப்பட்டனர், எப்போது என்பது பற்றிய விவரங்களும் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தால் கண்டுபிடிக்க இயலவில்லை. பின்னர் தரவுகளை பார்த்த போது அந்த பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் நீதிபதிகள், மெக்சிகோ அரசியல்வாதிகள், பிரான்ஸ் வழக்கறிஞர்கள் மற்றும் அமெரிக்காவில் சுற்றுச்சூழல் குழுக்கள் இருந்துள்ளனர் என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெல்டிராக்ஸின் குப்தா மீது 2015ம் ஆண்டு ஹேக்கிங் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது, அதில் 2 அமெரிக்க தனியார் புலனாய்வாளர்கள், சந்தைப்படுத்தல் நிர்வாகிகளின் கணக்குகளை ஹேக் செய்ய பணம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டனர். குப்தா 2017ல் தப்பியோடியதாக அறிவிக்கப்பட்டார்.
டெல்லியில் உள்ள தனது வீட்டிலிருந்து தொலைபேசியில் பேசிய குப்தா, ஹேக்கிங் செய்வதை மறுத்ததோடு, சட்ட அமலாக்கத்தால் தன்னை ஒருபோதும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் கூறினார்.
ஒரு ராய்ட்டர்ஸ் செய்தியாளர் அவரை தனது அலுவலகத்திற்குச் சென்ற போது குப்தா பேச மறுத்துவிட்டார். டெல்லி காவல்துறை மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்கள் கருத்துக்கான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கவில்லை என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.