டெல்லி:
பிசி இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
மருத்துவ படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு குறித்து தொடரப்பட்ட வழக்கில் நேற்று சென்னை உயர்நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
இந்தியாவைப் பொருத்தவரையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இருவரும் ஓபிசி என்ற வகைக்குள் வந்துவிடுவார்கள். ஆனால்,  தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஓபிசி என்பது பிசி, எம்பிசி உள்ளிட்ட பிரிவினருக்கான மொத்த இட ஒதுக்கீடு சலுகை ஆகும்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் ஓபிசி என்பது பிசி மற்றும் எம்பிசியாக பிரித்து தனித்தனியாக குறிப்பிட்ட சதவீதத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

அகில இந்திய மருத்துவப் படிப்புக்கு இளங்கலை படிப்பில் 15 சதவீத இட ஒதுக்கீடும், மருத்துவ முதுகலை படிப்பில் 50 சதவீத ஒதுக்கீடும் மாநில அரசால் ஒதுக்கப்பட்டு வருகிறது. இதன்படி முதுகலைப் படிப்பில் 945 இடங்களும், இளங்கலை மருத்துவப் படிப்பில் 400க்கும் மேற்பட்ட இடங்கள் தமிழகத்தில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ஓபிசிக்கு எவ்வளவு பிற்படுத்தபட்ட மாணவர்களுக்கு மத்திய அரசின் விதிப்படி 27 சதவீத இடங்களை வழங்கலாம். அப்படி வழங்குவதால் மொத்த இட ஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேலே போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
மத்திய அரசு தற்போது மத்திய கல்வி நிறுவனங்களில் எஸ்.சி. – 15, எஸ்.டி.-7.5, ஓ.பி.சி. – 27, இ.டபிள்யூ.சி. – 10 ஆக மொத்தம் 59.5 சதவீத இட ஒதுக்கீட்டினை அமலாக்கி வருகிறது. ஆனால்,  மாநிலங்கள் அளிக்கும் இடங்களில் ஓ.பி.சி.க்கு இட ஒதுக்கீடு வழங்கும் போது மத்திய அரசு ஏற்க மறுத்து வருகிறது. இது தொடர்பாக  கடந்த  2006-ம் ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றிய சட்டம் மாநிலங்களின் உரிமையை பறிப்பதாக இருந்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இதுதொடர்பான வழக்கில்  சென்னை உயர்நீதி மன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி, 50% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு விரைந்து சட்டம் இயற்ற குழு அமைக்க வேண்டும். இதற்காக உடனே மூன்று நபர் கமிட்டி அமைத்து முடிவு எடுக்க வேண்டும், இதற்கு சட்ட ரீதியாக எந்த விதமான தடையும் இல்லை என்று கூறியது.
இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் மத்தியஅரசு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளதால்,  தங்களது தரப்பு  கருத்தை கேட்காமல் ஆணை பிறப்பிக்க கூடாது என்று திமுக சார்பில் கேவியட்  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.