சென்னை:
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் மதுசூதனனை ஆதரித்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திறந்த ஜீப்பில் சென்றும், குறுகிய தெருக்களில் நடந்து சென்றும் வாக்குகள் சேகரித்து வருகிறார்.
அதேபோல், தொப்பி சின்னத்திற்கு வாக்கு கேட்டு அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரனும் வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதனால் ஆர்.கே.நகர் தேர்தல் களம் பரபரப்புடன் காணப்படுகிறது.
இந்நிலையில், சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் நேற்று மாலை பன்னீர்செல்வம் தரப்பினரும், டிடிவி தினகரன் தரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தண்டையார் பேட்டை காவல் நிலையத்தில் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்குமார், தம்பி ராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுதுது ரவீந்திரநாத் குமாரும், ராஜாவும் முன் ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். ‘‘மோதல் நடைபெற்ற இடத்தில் நாங்கள் இல்லாத நிலையில் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.