ரெய்ப்பூர்:

பொருளாதாரம் எனும் வண்டியை இயக்கும் பெட்ரோல் தான் குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டம் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.


சட்டீஸ்கர் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பேரணியில் கலந்து கொண்டு அவர் பேசும்போது, “குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டத்தின் படி தாங்கள் நினைத்த பொருளை மக்கள் வாங்கிக் கொள்ள முடியும்.

அவ்வாறு வாங்கும் போது, அந்த பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வளர்ந்து, வேலை வாய்ப்பும் பெருகும்.

பொருளாதாரம் எனும் வண்டியை இயக்கும் பெட்ரோல்தான் குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டம்.

கடந்த 2014 ம் ஆண்டு நரேந்திரமோடி பெரிய, பெரிய வாக்குறுதிகளை எல்லாம் கொடுத்தார். 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்றும், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் என்றும், ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம் என்றும் உறுதி அளித்தார்.

ஆனால், சொன்னதை செய்யாமல், ஏழை மக்களின் பாக்கெட்டுகளிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டார். ரூ.15 லட்சம் வங்கிக் கணக்கில் போடமுடியாது என்றும் எனக்கு தெரியும்.

உலகப் பொருளாதார நிபுணர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் கலந்தாலோசித்து, பொருளாதாரத்தை பாதிக்காத வகையில் எவ்வளவு பணத்தை மக்களின் வங்கிக் கணக்கில் போட முடியும் என்று ஆலோசனை நடத்தினோம்.

எவ்வளவு போட முடியும் என்ற விவரத்தோடு வாருங்கள் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை கேட்டுக் கொண்டேன்.
5 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.72 ஆயிரம் வழங்க முடியும் என என்னிடம் தெரிவித்தார்.

சட்டீஸ்கரில் விவசாய கடனை தள்ளுபடி செய்வோம் என்று கூறியபோது, எங்கிருந்து தள்ளுபடி செய்வீர்கள் என்று மோடி கேட்டார்.

சொன்னபடியே சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் ஆட்சிக்கு வந்ததும் விவசாய கடனை தள்ளுபடி செய்தோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடனேயே பரம ஏழைகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுதோறும் ரூ. 72 ஆயிரம் போடுவோம்.

21- வது நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து நிச்சயம் வறுமையை விரட்டுவோம். வறுமை மீது துல்லிய தாக்குதல் நடத்தி அடுத்த 15 ஆண்டுகளுக்குள் இதனை செய்து காட்டுவோம்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப்பட்டது பெண்கள்தான். எனவே, குறைந்தபட்ச வருவாய் திட்டத்தின் கீழ், பெண்களின் வங்கிக் கணக்கில் பணம் போடப்படும்.

45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, ஏழைகளிடமிருந்து பணத்தைப் பெற்று வங்கிகளில் போட்டனர். பின்னர் அந்த பணத்தை நீரவ் மோடி போன்றவர்களுக்கு கொடுத்து, அவர்கள் தப்பியோடினர் என்றார்.