சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை  எழிலகத்தில் சத்துணவுப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் சென்னை எழிலகம் வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவுப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவுப் பணியாளர்கள் தங்களை காலமுறை ஊதியத்திற்கு மாற்ற வேண்டும், உரிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாகத் தொடர் போராட்டங்களை  நடத்தி வருகின்றனர். 2021ல்திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்,  சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் (எண்: 313) வாக்குறுதியளித்த நிலையில், இதுவரை அதை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருகிறது.

இதையடுத்து திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும்,  அங்கன்வாடிகளில் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் சமையலர்கள், சமையல் உதவியாளர்களுக்கு தமிழக அரசு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கி வரும் நிலையில் காலமுறை ஊதியமாக மாற்ற வேண்டும் என்றும், ஓய்வுபெறும் நாளில் சத்துணவு அமைப்பாளருக்கு 5 லட்சம் ரூபாயும், சமையலர் மற்றும் சமையல் உதவியாளருக்கு மூன்று லட்சம் ரூபாயும் தர வேண்டும் என்றும், காலி பணியிடங்கள் நிரப்பப்படாததால் தங்களுக்கு பணிச்சுமை ஏற்பட்டுள்ளது எனவே காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள அரசு அலுவலங்களின் கட்டிடமான எழிலகம் கட்டிடம் வளாகத்தில், இன்று காலை முதல் சத்துணவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.