டில்லி:

டில்லியில் உள்ள ஆயிரத்து 700 நர்சரி பள்ளிகளி நாளை முதல் மாணவர் சேர்க்கை தொடங்குகிறது. இதற்கான விதிமுறைகளை அந்தந்த பள்ளிகளின் வெப்சைட்களில் இன்று வெளியிடப்ப்டடுள்ளது. விண்ணப்ப விநியோகம் நாளை முதல் நடக்கிறது.

விண்ணப்பம் தொடர்பான நடைமுறைகள் ஜனவரி 17ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. மாணவர் சேர்க்கையின் முதல் பட்டியல் பிப்ரவரி 15ம் தேதி வெளியிடப்படும். பதிவு கட்டணம் ரூ.25 ஆகும். 25 சதவீதம் இடங்கள் பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை அரசு மூலம் நடைபெறும்.

மாணவர் சேர்க்கை புள்ளிகள் அடிப்படையில் நடக்கும். ஒவ்வொரு குழந்தைக்கும் அதிகபட்சம் 100 புள்ளிகள் வரை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு என டில்லி உயர்நீதிமன்றமும் சில விதிமுறைகளை வகுத்து ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் 2016ம் ஆண்டு ஜனவரியில் அரசும் மாணவர் சேர்க்கைக்கு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

20 சதவீதம் நிர்வாக ஓதுக்கீடாகும். அதே பள்ளியில் பயின்றவர்கள், அருகில் வசிப்பவர்கள், பள்ளிகளின் தனிப்பட்ட விதிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும். அதிக பள்ளிகள் அருகில் வசிப்பவர்க்கு அதிக புள்ளிகள் வழங்கும். 3 கி.மீ.க்குள் வசிக்கும் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.