ஸ்ரீரங்கம்
கிறித்துவ கன்னியாஸ்திரிகள் சிலர் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றதாக வெளியான புகைப்படம் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
திருச்சி அருகில் உள்ளது ஸ்ரீரங்கம். இங்குள்ள ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலயம் மிகவும் புகழ்பெற்றதாகும். இந்தியா முழுவதும் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இந்து பக்தர்களும் சுற்றுலாப்பயணிகளும் பெருமளவில் வருகின்றனர். புராணங்களிலும் இந்த ஸ்ரீரங்கம் பற்றி கூறப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை கிறித்துவ மதத்தை சேர்ந்த சில கன்னியாஸ்திரிகள் இந்த கோவிலுக்கு வந்துள்ளனர். அவர்கள் தங்களுடைய மத சீருடையுடன் கோவிலுக்குள் உள்ள ஆயிரம் கால் மண்டபத்துக்குள் நுழையும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. அத்துடன் அவர்கள் கோவிலுக்குள் தங்கள் மத முறைப்படி பிரார்த்தனை செய்ததாகவும் செய்திகள் பரவின.
இந்த செய்தி மற்றும் புகைப்படம் இந்து மத பக்தர்களிடையே பரபரப்பை உண்டாகி உள்ளது. இது குறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் செய்தியாளர்கள் கேள்விகள் கேட்டனர். அறநிலையத்துறை அதிகாரி ஒருவர், “அந்த கன்னியாஸ்திரிகள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் மத சீருடையில் வந்தது உண்மை தான். ஆனால் கோவிலில் அவர்கள் மத பிரார்த்தனையை செய்யவில்லை.
அவர்கள் வெளிபிரகாரத்தில் உள்ள ஆயிரம் கால் மண்டபம் வரையில் வந்துள்ளனர். இது குறித்து பக்தர்கள் ஆலய அதிகாரிகளுக்கு தெரிவித்ததும் அவர்கள் அந்த கன்னியாஸ்திரிகளை உள்ளே வரக்கூடாது என அமைதியான முறையில் தடுத்தனர். அதை ஒட்டி அந்த கன்னியாஸ்திரிகள் அந்த இடத்தை விட்டு உடனடியாக சென்று விட்டனர். வேற்று மதத்தை சார்ந்தவர்கள் கோவிலுக்குள் குறிப்பிட்ட எல்லையை தாண்டி எப்போதுமே அனுமதிக்கப்படுவதில்லை” என தெரிவித்துள்ளார்.
Photo courtesy : WhatsApp