பணியில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை விட ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக மத்திய பணியாளர் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

50 – 60 லட்சம் பேர் தற்போது அரசுப் பணியில் சேவை செய்து வரும் நிலையில் ஓய்வூதியம் பெறுபவர்கள் எண்ணிக்கை 77 லட்சமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

ஓய்வூதியம் பெறுவோரில் சுமார் 6,000 -7,000 பேர் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் பழைய ஓய்வூதிய சட்டப்படி அவர்கள் பெற்ற சம்பளத்திற்கு இணையான தொகையை முழு ஓய்வூதியமாக பெறுகின்றனர்.

மேலும் 90 முதல் 100 வயது வரை உள்ள ஓய்வூதியதாரர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு லட்சம் என்று கூறிய ஜிதேந்திர சிங். “100 வயதுக்கு மேல் முழு ஓய்வூதியம் பெறுபவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கூடுதலாக அமையும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது, விவாகரத்து பெற்ற மகள்கள் குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள் என்றும், ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான ஏழாண்டு பணித் தகுதி நீக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலன் செயலாளர் வி. ஸ்ரீனிவாஸ் கூறுகையில், அனைத்து 11.25 லட்சம் ஓய்வூதியர்களையும் ஆன்லைனில் கொண்டு வருவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறினார்.