சென்னை:
தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுத விண்ணப்பம் கடந்த ஆண்டை விட 17 சதவிகிதம் குறைந்துள்ளதாக தேசிய கல்வி முகமை தெரிவித்து உள்ளது.
எம்.பி.பி.எஸ், (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) ஆகிய இளநிலை பட்ட மருத்துவம் படிப்பதற்கான நீட் நுழைவு தேர்வு விண்ணப்பம் கடந்த ஆண்டு (2019) டிசம்பர் மாதம் 2ந்தேதி தொடங்கி ஜனவரி (2020) 6ந்தேதி வரை நீடித்தது. நீட் தேர்வு வரும் மார்ச் மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான விண்ணப்பம் 17 சதவிகிதம் குறைந்துள்ளதாக தேசிய தேர்வு முகமையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும் தமிழகத்தில் கடந்த ஆண்டு (2019) தேர்வுக்கு 1.40 லட்சம் விண்ணப்பம் வந்திருந்த நிலையில் இந்த ஆண்டு (2020) நீட் தேர்வுக்கு 1.17 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 74ஆயிரம் விண்ணப்பங்கள் அதிகரித்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
நாடு முழுவதும் கடந்த 2016ம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. 2016-17ம் ஆண்டில் 88,881 பேர் விண்ணப்பங்கள் செய்ததாகவும், இவர்களில் 83,859 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 38.84% பேர் மட்டுமே தேர்வு பெற்றார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2017-2018ம் ஆண்டில் நீட் தேர்வுக்கு 1.31 லட்சம் பேர் விண்ணப்பித்து, அவர்களில் 1.26 லட்சம் பேர் தேர்வை எழுதிய நிலையில், 39.55 சதவிகிதம் மட்டுமே தேர்ச்சி பெற்றதாகவும்,
2018-19ம் ஆண்டில் 1.40 லட்சம் பேர் விண்ணப்பித்து, 1.23 லட்சம் பேர் தேர்வை எழுதிய நிலையில், 48.57 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
நடப்பாண்டில் (2019-2020) நீட் தேர்வுக்காக 1.17 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக தெரிவித்துள்ள தேசிய தேர்வு முகமை, இது கடந்த ஆண்டை விட அதிகம் என்று தெரிவித்துள்ளது. அதே வேளையில், தமிழகத்தில் நடப்பாண்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை 17 சதவிகிதம் குறைந்து உள்ளது என்றும் கூறி உள்ளது.
மேலும், நீட் தேர்வு விண்ணப்பிக்கும் மாநிலங்களில் நாட்டிலேயே 2,28,829 பேர் விண்ணப்பித்து மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும், 1,54,705 கேர் விண்ணப்பித்து உத்தரபிரதேசம் 2வது இடத்திலும், 1,38,140 பேர் விண்ணப்பித்து ராஜஸ்தான் 3வது இடத்திலேயும் உள்ளது. 4வது இடத்தில் கர்நாடக மாநிலம் உள்ளது. இங்கு 1,19,626 பேர் விண்ணப்பித்து உள்ளனர். 5வது இடத்தில் தமிழகம் உள்ளது. இங்கு, 1,17,502 பேர் விண்ணப்பித்து உள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை தரவுகள் தெரிவிக்கின்றன.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது குறைந்து வருவது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. கடந்த ஆண்டு நீட் தேர்வில், ஆள் மாறாட்டம் போன்றவை நடைபெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்றதில் 70 சதவிகிதம் பேர் பழைய மாணவர்கள் என்பதும் தெரிய வந்தது.
இதுபோன்ற காரணங்களால், தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வு விண்ணப்பம் பெருமளவில் குறைந்துள்ளது.