சென்னை: பெரியார்  மற்றும் திராவிடம்  குறித்து விமர்சனம் செய்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிட அரசு என்று கூறி வரும்,  திமுக அரசால் கார்னர் செய்யப்பட்டு வருகிறார். கடந்த ஓரிரு நாட்களில் மட்டும்,   சீமான் மீது சென்னை உள்பட பல மாவட்டங்களில் 62 வழக்குகள் பதிவு  செய்யப்பட்டு உள்ளது. இதன்பேரில் அவர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீமானின் அரசியல் பயணத்தை முடக்க திமுக அரசு முயற்சித்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

இளைஞர்கள் கூட்டத்தை தனது கையில் வைத்துள்ள நாம் தமிழர் கட்சி, தமிழக அரசியலில் மற்ற  அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக வளர்ந்து வருகிறது. இதுவரை எந்தவொரு தேர்தலிலும் எந்தவொரு கட்சியுடனும்  கூட்டணி வைக்காமல், தேர்தல் நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும்  போட்டியிட்டு, தற்போது மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது.  இவரது வருகையால் திராவிட கட்சிகளின் வாக்கு வங்கிகள் குறைந்து வருவதை மறுக்க முடியாது. மேலும் சீமானின் அதிரடி விமர்சனம் அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதை கலாச்சாரம், பாலியல் வன்முறைகள், தமிழ் மீதான மறைமுக தாக்குதல், திராவிடத்தை உயர்த்தி பிடிப்பது, பிறப்பால் கன்னடரான பெரியாரை, தமிழர்களின் தலைவர் போன்று உருவகம் செய்யப்படுவது   போன்றவற்றை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

இதனால், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, சீமானை முடக்க பல்வேறு வகையில் முயற்சித்து வருகிறது. ஏற்கனவே அவ்வப்போது அவர்மீது பல வழக்குகளை போட்டுள்ள நிலையில், தற்போது, பெரியார் குறித்து சீமான் விமர்சனம் செய்ததை, தனது கட்சி மற்றும் ஆதரவு கட்சியினர் மூலமாக காவல்துறையில் புகார்கள் கொடுக்கவும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் மறைமுகமாக உதவி வருகிறது. அதன்பயனாக, சீமான்மீது கடந்த ஓரிரு நாளில் மட்டும் அனைத்து மாவட்டங்களிலும் திமுகவினர் மற்றும் திகவினரால் புகார்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  ஜனவரி 10ந்தேதி வரை 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.  அரசியலில் வளர்ந்து வரும் சீமானை முடக்கும் நோக்கில் திமுக அரசு செயல்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இதனாலேயே சீமான் கார்னர் செய்யப்படுகிறார் என்று கூறும் அரசியல் விமர்சகர்கள், இலவசத்தை காண்பித்து, தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சி அமைத்து வரும் திராவிட கட்சி களுக்கு மாற்றாக தமிழக  இளைஞர்களிடையே சில அரசியல் கட்சிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. முன்பெல்லாம் கம்யூனிஸ்டு கட்சிகள் அந்த பணிளை மேற்கொண்டு வந்தன. ஆனால், தற்போது போராட்ட குணம் கொண்ட கம்யூனிஸ்டுகளும் திராவிட கட்சிகளின் அடிவருடிகளாக மாறி போனதால், இலவசம் மற்றும் போதைய  மயங்கி உள்ள தமிழக மக்களை மீட்க சில கட்சிகள் முன்வெந்துள்ளன.  அதற்கான பணிகளை   நாம் தமிழர் கட்சி தலைவர்  சீமான், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் போன்றவர்கள் செய்ய முன்வந்துள்ளனர். இவர்களின் அரசியல் பிரவேசம் திராவிட கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர்களை முடக்கும் முயற்சியில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே திமுக அரசையும், திராவிடம் குறித்தும் கடுமையாக விமர்சித்து வருகிறார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான். இதற்கிடையில், திருச்சி மாநர காவல் ஆணையருக்கும்  சீமானுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, சந்தைகடை சண்டை போல நீண்டு வருகிறது. மேலும், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும் சீமான் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதனால், சீமான் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சீமான சில மாதங்கள் தொடர்ந்து சிறையில் வைக்க திமுக அரசு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே திமுக அரசையும், முதல்வரின் குடும்பத்தையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்த சவுக்கு சங்கர் உள்பட பல விமர்சகர்களை கைது செய்து சிறையில் அடைத்து கொடுமைப்படுத்திய திமுகஅரசு, தற்போது சீமானை கட்டம் கட்டி உள்ளது. 

நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியார் குறித்து தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாகின. இதையடுத்து, பெரியார் பற்றி அவதூறாகப் பேசியதாக  சீமான் மீது, சென்னை, கோவை, சேலம், மதுரை, நெல்லை, திண்டுக்கல் உள்பட பல மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்து வரும் நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய பேசிய சீமான் மீது கலவரத்தை தூண்டும் விதமாக பேசுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துகளை பேசுவது ஆகிய பிரிவுகளில் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

இதைத் தொடர்ந்து, சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை தபெதிகவினர் நடத்தினர். புதுச்சேரி நெல்லித்தோப்பில் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற சீமானுக்கு எதிராக திராவிட இயக்க அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக சட்டத் துறை இணை செயலாளர் மருதுகணேஷ் புகார் கொடுத்தார். இதேபோல, தமிழகம் முழுவதும் சீமானுக்கு எதிராக திக, திமுக, தபெதிகவினர் புகார் கொடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில், சென்னை உட்பட 11 மாவட்டங்களில் சீமான் மீது 62 வழக்குகளை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மதுரை கே.கே.நகரை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். ‘‘பெரியார் குறித்து சீமான் கூறிய கருத்துகள் அவதூறானவை. சமூகஊடகங்களில் இது வேகமாக பரவுகிறது. சீமான் மீது வழக்கு பதிவு செய்ய கோரி அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் வழக்கு பதிவு செய்யவில்லை. எனது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று மனுவில் அவர் கூறியிருந்தார்.

இதை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், ‘‘சீமான் தெரிவித்த கருத்துகள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் உள்ளன. எனவே, மனுதாரரின் மனுவை பெற்று போலீஸார் உரிய நடவடிக்கை எடுத்து, நீதிமன்றத்தில் 20-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ளார்.

இதன் காரணமாக சீமான் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீமான் கூறியது என்ன?

‘திராவிட ஒழிப்பும், பெரியார் எதிர்ப்பும்’ எனது கொள்கை என கூறி வரும் நாம் தமிழர் கட்சி தலைவர்,  சீமான்,  கடந்த  3ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்கள் யாரும் படிக்கவில்லையா? என கேள்வியதுடன்,  அம்பேத்கரையும் பெரியாரையும் சமமாக பேசுவதா? என கேள்வி எழுப்பியதுடன், பெரியார் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டால் தான் உண்மைகள் தெரிய வரும் என்று கூறி வருகிறார்.

பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்தார்? வள்ளலாரை தாண்டி பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்தார்? பெரியார் பேசினார் என்றால் பரவாயில்லை.

பெரியார்தான் எல்லாம் செய்தார் என்று சொன்னால் அது எப்படி? வஉசி, இரட்டைமலை சீனிவாசன், மறைமலை அடிகள் எல்லாம் இல்லையா?

“தமிழ் மொழியை குப்பை என்றும், காட்டு மிராண்டி மொழி என்றும் பெரியார் விமர்சித்துள்ளார். தமிழை காட்டு மிராண்டி மொழி எனக்கூறிய பெரியார் எந்த மொழியில் எழுதி பேசினார்?

தமிழ்த்தாய் உங்களை படிக்க வைத்தாளா? என பெரியார் பேசவில்லையா?

தமிழை சனியன் என்று பெரியார் குறிப்பிட்டுள்ளார். பெரியாரின் அடிப்படையே தவறானது.

திருக்குறள் குறித்து அவதூறான கருத்துகளை பெரியார் பேசி இருக்கிறார். கம்பர், இளங்கோவடிகள், திருவள்ளுவர் போன்றோரை எதிரி எனக் கூறியவர் பெரியார்.

இஸ்லாமியர்களை துலுக்கர்கள் என்றும் வேறு நாட்டவர் என்றும் கூறியவர் பெரியார் ,  கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் எதிரிகள் என பெரியார் சொல்வதை எப்படி ஏற்கிறீர்கள்? நமக்கு கீழே உள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் எதிரிகள் என்றால் நாம் யார், உங்களில் கீழானவர் யார்?

தமிழர்களுக்கு பெரியார் தான் அரண் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?” எனவும் கேள்விகளை எழுப்பினார்.

அதனைத்தொடர்ந்து ” நான் என்னுடைய ஆரம்ப காலத்தில் பெரியாரை ஆதரித்தபோது தெளிவு இல்லாமல் இருந்தேன். தற்போது தெளிவாகிவிட்டேன்.  நான் இப்போது தான் படிக்க ஆரம்பித்து இருக்கிறேன். அப்படி படித்து வரும்போது தான் எனக்கு ஒரு தெளிவு வருகிறது.

என்னுடைய இனத்தின் இறப்பில் தான் இவன் எல்லாம் திருட்டு பையன் என்று தெரிய வருகிறது. 2008, 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் தான் திராவிடன் திருடன் என்று எனக்கு தெரியவந்தது.

பெரியார் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டால் தான் உண்மைகள் தெரிய வரும்.

திராவிடன் என்பது யார்?, இதற்கெல்லாம் சான்று கேட்காதது ஏன்?

 3 ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்கள் யாரும் படிக்கவில்லையா?

பெரியார் வந்த பின்னர் தான் படித்தோம் என்றால் அதற்கு முன்னர் திருக்குறள் உள்ளிட்ட நூல்கள் வந்தது எப்படி?

பெரியார் வருவதற்கு முன்பு 3,000 ஆண்டுகளாக யாரும் படிக்கவில்லையா?

உறவுமுறைகள் குறித்து தவறாக பேசியவர் பெரியார்”

பெரியார் குறித்து கடந்த காலங்களில் பேசியது தவறு என்று ஒத்துக்கொள்கிறேன். பிரபாகரனை பார்த்த பின்னர் தான் தமிழ் தேசியம் குறித்த தெளிவு பிறந்தது. மேலும்

தமிழர்களின் உறவுமுறைகள் குறித்தும், தமிழ் மொழி குறித்தும் மிக அவதூறான கருத்துகளை பேசிய பெரியார் எப்படி சமூக நீதி போராளியாக இருக்க முடியும்

தந்தை பெரியார் பேசியது தொடர்பான அனைத்து ஆதாரங்களை நீங்கள் வைத்துக்கொண்டு என்னிடம் ஆதாரம் கேட்டால் எப்படி?

நாங்கள் தான் ஆதாரங்களை காணொலியில் வெளியிட்டு கொண்டிருக்கிறோம். *

அம்பேத்கர், பெரியாரை ஒன்றாக வைப்பது, ஒப்பிடுவது எப்படி சரியாகும்? இருவரையும் ஒப்பிடும் அளவுக்கு எதாவது முரண் இருக்கிறதா? இரண்டு சிலைகளையும் ஒரே இடத்தில் வைத்தால் அது ஒன்றாகிவிடுமா? இரண்டு பேருடைய சிந்தனையும் ஒன்றா?

உலகத்தில் ஆகச்சிறந்த கல்வியாளர் என்றால் அம்பேத்கர் தான். பெரியார் யார்? தனக்கு தோணுவதை பேசிகொன்டு சென்றவர் அவர். எனவே, அம்பேத்கரையும் அவரையும் ஒப்பிட்டு பேசுவது என்பது முட்டாள்தனம்.

பெரியாரை கொள்கை வழிகாட்டியாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

பெண்ணிய உரிமை குறித்து தவறாக பேசியவர் பெரியார்.

குறிப்பாக, தாய், மகள் என உறவுகள் குறித்து அவதூறான கருத்துகளையே பெரியார் பேசியுள்ளார்.

இதற்கு பெயர் பெண்ணிய உரிமையா?

தன்னுடைய தோட்டத்தில் இருந்த 1000 தென்னை மரங்களை வெட்டிய பெரியார் பகுத்தறிவாதியா? நானும் ஒரு விவசாயி தான்.

என்னுடைய தோட்டத்தில் கள் இறக்க அனுமதி இல்லை. இதை செய்வது தான் அறிவார்ந்தவர்களின் பணி. மரத்தை வெட்டுவது அல்ல.

சமூக நீதிக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. சமூக நீதியை போராடி பெற்றுக் கொடுத்தவர் ஆணைமுத்துவா அல்லது பெரியாரா? ” என சீமான் கேள்வி எழுப்பியதுடன்,

திராவிடத்தையும், பெரியாரையும் எதிர்ப்பதுதான் எனது கொள்கை என மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார்.

பெரியார் குறித்து சீமானின் இத்தகைய கருத்துகள் அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் மோதல்: ‘நீ அவ்வளவு பெரிய அப்பா டக்கரா?’ என வருண்குமார் ஐபிஎஸ்-ஐ நார் நாராய் கிழித்த சீமான்…