டெல்லி: தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் மீது டெலிபோன் ஒட்டுக் கேட்டதாக மேலும் ஒரு வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளது.

தேசிய பங்குச் சந்தை நிர்வாக இயக்குநராக 2013 முதல் 2016 ஆண்டு வரை சித்ரா ராமகிருஷ்ணா  பணிபுரிந்து வந்தார். அவரது பணிக்காலத்தின்போது, தமிழகத்தைச் சேர்ந்த  ஆ்னந்த் சுப்பிரமணியன் என்பவரை நிர்வாக செயலாக்க அதிகாரியாக நியமித்ததில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும், அரசு தொடர்பான நிகழ்வுகளை இமயமலை சாமியார் ஒருவருடன் பகிர்ந்துகொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து,  மும்பையில் உள்ள சித்ரா ராமகிருஷ்ணன் வீடு உள்பட அவர் தொடர்புடைய அலுவலகங்களில் மும்பை வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி சோதனை மேற்கொண்டனர். இதேபோல ஆனந்த் சுப்பிரமணியத்திற்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடந்தன. அதையடுத்து,  கடந்த  பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி நள்ளிரவு ஆனந்த் சுப்ரமணியம் கைது செய்யப்பட்டார்.  அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு விசாரைணை நடைபெற்று வருகிறது

இந்த நிலையில், பங்குச்சந்தை ஊழியர்கள் தொலைபேசியை ஒட்டுக்கேட்ட குற்றச்சாட்டில்  சித்ரா ராமகிருஷ்ணன் மற்றும் மும்பை நகர முன்னாள் காவல் ஆணையர் சஞ்சய் பாண்டே மீதும் சிபிஐ புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. கடந்த 2009-17 ஆண்டு வரை பங்குச்சந்தை ஊழியர்கள் தொலைபேசியை ஒட்டுக்கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.