மும்பை: அதானி குழுமத்தின் பங்குகளை வைத்துள்ள 3 வெளிநாட்டு நிறுவனங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அதான நிறுவன பங்குகள் கடுமையான சரிவை சந்தித்தன. இதனால், சுமார்ஒருமணி நேரத்தில் ரூ.73ஆயிரம் கோடியை அதானி குழுமம் இழந்துள்ளது.
மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது முதல், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான அதானி குழுமம் வரலாறு காணாத வெற்றியை ஈட்டி வருகிறது. இந்திய வர்த்தகச் சந்தையில் கடந்த சில வருடங்களாக அதானி குழும நிறுவனங்கள் வியக்கவைக்கும் வளர்ச்சி அடைந்து நாட்டின் முன்னணி வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாக உயர்ந்துள்ளது. அதானி குழும நிறுவனங்களின் அதிரடி வளர்ச்சியின் மூலம் இந்நிறுவனத் தலைவரான கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பங்களின் சொத்து மதிப்பு டாடா, பிர்லா, வாடியா எனப் பல முன்னணி பணக்கார குடும்பங்களையும் கடந்து, உலக பணக்காரர்கள் வரிசையில் முன்னேறி வருகிறார். ஆசியாவின் முதல் பணக்காரராக திகழ்ந்து வருகிறார்.
இவரது நிறுவனத்தில் ரூ.43,500 பங்குகளை வைத்துள்ள 3 வெளிநாட்டு நிறுவன கணக்குகளை NSDL (National Securities Depository Ltd (NSDL)) எனப்படும் தேசிய பத்திர அமைப்பு முடக்கி உள்ளது. இதன் காரணமாக இன்றைய வர்த்தக சந்தையில், அதானி நிறுவன பங்குகள் 5-20% வரை சரிவுகண்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்தில் ரூ.73.250 கோடி அதானி குழுமத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள 4 அதானி குழும நிறுவனத்தில் பங்குகளை வைத்திருக்கும் அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்களின் கணக்கை முடக்கியுள்ளது NSDL அமைப்பு. அதன்படி
அல்புலா இன்வெஸ்ட்மென்ட் பண்ட், கிரெஸ்டா பண்ட் மற்றும் ஏபிஎம்எஸ் இன்வெஸ்ட்மென்ட் பண்ட் ஆகிய நிறுவனங்கள் 43,500 கோடி ரூபாய் மதிப்பிலான அதானி எண்டர்பிரைசர்ஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளைத் தனது FPI கணக்கில் வைத்துள்ளது. இந்த நிறுவனங்களின் கணக்குகளை தேசிய பத்திர அமைப்பு மே 31ஆம் தேதியன்று முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தத் தகவல் இன்றுதான் வெளிச்சத்துக்கு வந்தது. இது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், பங்குசந்தையிலும் கடும் சரிவை சந்தித்துள்ளது.
இதுகுறித்து அதானி குழுமம் இன்று மாலையில் வெளியிட்டுள்ள விளக்கத்தில், அல்புலா இன்வெஸ்ட்மென்ட் பண்ட், கிரெஸ்டா பண்ட் மற்றும் ஏபிஎம்எஸ் இன்வெஸ்ட்மென்ட் பண்ட் ஆகிய நிறுவனங்களின் FPI கணக்கை NSDL அமைப்பு முடக்கியதில் அதானி குழுமத்தின் பெயர் வருவது முற்றிலும் பிழையானது. இது முதலீட்டாளர்களும், நிறுவனத்தின் நற்பெயருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் குறிப்பிட்ட நிறுவனங்களின் கணக்குகள் முடக்கப்படவில்லை (Forzen) ஹோல்ட் மட்டுமே செய்யப்பட்டு உள்ளது என Registrar and Transfer Agent எழுத்துப்பூர்வமாக மின்னஞ்சல் மூலம் உறுதி செய்துள்ளது என தெரிவித்து உள்ளது.