டாக்கா
வங்கதேச தேசிய கட்சியின் பொதுச் செயலர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் அலாம்கிர் இந்தியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வங்க தேச எதிர்க்கட்சிகளில் ஒன்றான வங்கதேச தேசியக் கட்சி கலிதா ஜியாவின் தலைமையின் கீழ் இயங்கி வருகிறது. இக்கட்சியின் பொதுச் செயலர் மிர்சா ஃபகுருல் இஸ்லாம் அலாம்கிர் ஆவார். நேற்று வங்கதேசத்தில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி தியாகிகள் நினைவுச் சின்னத்தில் ஃபக்ரூல் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அவர் தனது உரையில், ”வங்க தேச விடுதலைப் போரில் ஏராளமான தியாகிகள் பாகிஸ்தான் வீரர்களால் கொல்லப்பட்டனர். மற்றும் ஏராளமானோர் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டனர் அவர்களில் ஒருவரான நமது கட்சித் தலைவி கலீதா ஜியா தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய அரசு சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை அழித்து வருகிறது. இதன் மூலம் ஜனநாயகத்தை அரசு மிகவும் பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. ஆட்சியாளர்கள் நமது நாட்டின் முன்னேற்றத்தை அழித்து நமது உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பறித்துள்ளனர்.
நாட்டின் ஜனநாயகத்துக்கும் சுதந்திரத்துக்கும் இந்தியாவின் தேசிய குடியுரிமை பதிவேடு மற்றொரு மிரட்டல் ஆகும். இதை நாங்கள் ஆரம்பத்தில்இருந்தே சொல்லி வருகிறோம். தேசிய குடியுரிமை பதிவேடு துணைக் கண்டத்தில் மோதலையும் வன்முறையையும் ஏற்படுத்தும். இதன் பின்னணியில் இன அரசியல் மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரான போக்கு ஆகியவை உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.