டெல்லி: நாட்டில் கொரோனா வைரஸ் எதிரொலியாக, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான என்பிஆர் மற்றும் தரவு சேகரிப்பை புதுப்பிக்கும் பணிகளை உள்துறை அமைச்சகம் கால வரையின்றி நிறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து தேசிய மக்கள் தொகை பதிவேடு நடைமுறை மற்றும் 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல்கட்ட பணிகளை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் ஏற்கனவே ஆலோசித்து வந்தனர். இந் நிலையில், 21 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதையடுத்து, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான என்பிஆர் மற்றும் தரவு சேகரிப்பை புதுப்பிக்கும் பணிகளை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

முன்னதாக,மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பணிகள் ஏப். 1 முதல் துவங்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.