சென்னை: ‘வேல்’-ஐ கையில் பிடிக்காதவர்கள் இன்று ‘வேல்’ பிடிக்கின்றனர் என்று சென்னையில் இன்று பாஜக வர்த்தகப் பிரிவு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வணிகர்கள், தொழிலதிபர்கள் உடனான கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

இந்த கலந்துரையாடலின்போது, அமைச்சரிம் வணிகர்கள், சூடத்திற்கு விதிக்கப்பட்டுள்ள 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும், பட்டாணி இறக்குமதியை அதிகரிக்க  வேண்டும், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களை இணைக்க 4வது ரயில் முனையம் அமைக்க வேண்டும், தீப்பெட்டி ஏற்றுமதியை 50 விழுக்காட்டில் இருந்து 80 விழுக்காடாக உயர்த்த உதவ வேண்டும், இலங்கைக்கு செல்லாமல் பிற நாடுகளுக்கு கப்பல்கள் சென்றுவர ஏதுவாக பாதை அமைத்துத் தர வேண்டும்  உள்பட பல கோரிக்கைகளை வைத்தனர்.

பின்னர் அவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர், , “பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு முதன்முதலாக தமிழ்நாட்டுக்கு வந்துள்ளேன். பட்ஜெட்டைப் பற்றி அனைவருக்கும் தெரியும் என்பதால், அது பற்றி விரிவாக பேச வேண்டியதில்லை. பட்ஜெட்டை உருவாக்குவதற்கு முன், ஊரடங்கு நாட்களில்  தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

மோடி அரசு. சாலைகள், ஜவுளிப் பூங்கா, மின்னனு சந்தைகள், மீனவர்களுக்கான துறைமுகம் என்று பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டிற்கு தந்தது பாஜக அரசு. 2014ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டுக்கு அதிக திட்டங்களை தந்து கொண்டிருப்பது பாஜக அரசு. 2014க்கு முன், ஆட்சியில் இருந்தவர்கள் தமிழ்நாட்டின் சின்னமாக இருக்கக் கூடிய ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தார்கள். கூடங்குளம், ஜல்லிக்கட்டு என்று தமிழ்நாட்டு முன்னேற்றத்துக்கு இடையூராக இருந்தவர்கள் தான் இன்று மோடி அரசைக் குறை கூறுகின்றனர்.

தமிழ்நாடு வளர்ச்சியடைய வேண்டும். தமிழ்நாட்டுக்கு நல்லாட்சி கிடைக்க வேண்டும் என்பதே மோடி அரசின் நோக்கம்.  இன்று வேல் யாத்திரையால் தமிழ்நாட்டு அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வேலை கையில் பிடிக்காதவர்கள் இன்று வேல் பிடிக்கின்றனர். தமிழ்நாட்டில் கோயிலுக்கே செல்லாதவர்கள் கோயிலுக்கு செல்லத் தொடங்கி உள்ளனர். தெய்வ வழிபாடு செய்தவர்களை கேலி செய்த தமிழ்நாட்டில் இன்று தெய்வ வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்ற மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாஜக – அதிமுக கூட்டணி அமைந்துவிட்டதால் தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு ஒருவித பயம் வந்துவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.