சென்னை, தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், சென்னையில் இன்று காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப்பருவமழை காலமாகும். தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. ஏற்கனவே தெற்மேற்கு பருவமழை காலத்தில் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் நீர் நிலலைகள் நிரம்பி விவசாயம் செழித்துள்ளது. மேலும் வெப்பச்சலனம் காரணமாகவும் அவ்வப்போது மழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது.
இந்த நிலையில், தென்மேற்கு பருவகாற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் இன்று மிதமான மழையும், நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும் பெய்யக்கூடும் என்று கூறியிருந்தது.
வானிலை மையத்தின் முன்னறிவிப்பை உண்மையாக்கும் வகையில், சென்னை உள்டப பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சூரியன் கண்ணுக்கு தெரியாத வகையில், வானம் மூடியிருந்ததால், மழை பெய்யும் என எதிர்பார்க்கப் பட்டது.
அதுபோல, காலை 8 மணி முதல் சென்னையின் பல பகுதிகளில் ஆங்காங்கே லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையின் தாம்பரம் முதல் மாதவரம் வரை அனைத்து பகுதிகளிலும் மழை பெய்தது. சென்னையின் புறநகர் பகுதிகளிலும் நல்ல மழை பெய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையில் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்கள், டெல்டா பகுதிகள், கடற்கரை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
நாளை (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களிலும் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும்
நாளை மறுதினும் (சனிக்கிழமை), அதற்கு அடுத்த நாளும் (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.