சென்னை: இங்கிலாந்து அணிக்கெதிரான சென்னை முதல் டெஸ்ட்டில், இந்தியா மோசமாக தோற்றதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றுக்கு தகுதிபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் தோல்விக்குப்பின், இந்திய அணி மோசமாக 4வது இடத்துக்கு 68.3% புள்ளிகளுடன் சரிந்துள்ளது. அடுத்துவரும் 3 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கணக்கில் இந்தியா வெல்ல வேண்டும் அல்லது 3-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றால்தான் இறுதிச்சுற்றுக்குச் செல்ல முடியும்.

அதேசமயம், இங்கிலாந்து அணி 70.0% புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. 3-1 என்ற கணக்கிலோ அல்லது 3-0 அல்லது 4-0 என்ற கணக்கில் இந்திய அணியை வென்றால் இங்கிலாந்து அணி இறுதிச்சுற்றுக்குச் சென்றுவிடும்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தாலோ அல்லது 1-0 என்ற கணக்கிலோ, 2-1 என்ற கணக்கிலோ அல்லது 2-0 என்ற கணக்கிலோ முடிந்தால், ஆஸ்திரேலிய அணி இறுதிச் சுற்றுக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி வென்றதன் மூலம 43.3 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கும், தென்னாப்பிரிக்க அணி 30% புள்ளிகளுடன் 6வது இடத்துக்கும் சரிந்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி 28.8% புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருக்கிறது.