பாரிஸ்: ஏடிபி டென்னிஸ் தரவரிசையில், அதிக வாரங்கள் நம்பர்-1 அந்தஸ்தில் இருந்த ரோஜர் ஃபெடரரின் சாதனையை சமன்செய்துள்ளார் செர்பியாவின் நோவக் ஜோகோவிக்.
அதேசமயம், சமீபத்திய ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் வென்றதால், இவர் அந்த சாதனையை அடுத்தவாரத்தில் முறியடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். ரோஜர் ஃபெடரர், அதிகபட்சமாக 310 வாரங்கள், உலக நம்பர்-1 வீரராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் முதலிடத்திற்கு வந்த ஜோகோவிக், தற்போதுவரை அந்தப் பட்டிலில் தொடர்கிறார். இவர், மொத்தமாக 5 தடவைகள், உலக நம்பர்-1 நிலைக்கு உயர்ந்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
கடந்த 2014 ஜூலை முதல், 2016ம் ஆண்டு நவம்பர் வரை, தொடர்ந்து 122 வாரங்கள் உலக நம்பர்-1 இடத்தில் இருந்தார் ஜோகோவிக். இந்த வகையில், இதுவரை உலகிலேயே தொடர்ச்சியாக அதிக வாரங்கள் உலக நம்பர்-1 தரவரிசையில் இருந்தவர் என்ற சாதனை(237 வாரங்கள்) ரோஜர் ஃபெடரரிடம் உள்ளது.