சிட்னி

செர்பிய டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தாம் ஆஸ்திரேலிய ஒப்பன் டென்னிஸில் விளையாட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஆஸ்திரேலிய ஒப்பன் டென்னிஸ்  போட்டிகள் வரும் 17 ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்குகிறது.    அத்துடன் ஜனவரி 30 ஞாயிற்றுக் கிழமை அன்று முடிவடைகிறது.   ஆனால் இந்த போட்டியில் முன்னணி வீரர்கள் கலந்துக் கொள்ள மாட்டார்கள் என ஒரு தகவல் வெளியானது.

அதையொட்டி டென்னிஸ் ரசிகர்கள் இந்த வருட ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ் போட்டியில் அதிக ஆர்வம் காட்டவில்லை.  இந்நிலையில் பிரபல டென்னிஸ் வீரரான ரஃபேல் நடால்  இந்த போட்டிகளில் கலந்து கொள்வதாக அறிவித்தார்.   அவருக்கு உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட. போது கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கதாகும்.

டென்னிஸ் விளையாட்டில் மற்றொரு முக்கிய முன்னணி வீரரான செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் உள்ள கொரோனா கட்டுப்பாடு காரணமாகப் போட்டியில் பங்கேற்பது பற்றிச் சொல்ல முடியாது எனத் தெரிவித்திருந்தார்.   மேலும் அவர் தாம் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டாரா என்பது  பற்றியும் தெரிவிக்காமல் இருந்தார்.

இந்நிலையில் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாம் ஆஸ்திரேலிய ஒப்பன் டென்னிஸ் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.  மேலும் தாம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் இருந்து மருத்துவர்களிடம் விலக்கு பெற்றதால் இதில் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.