சென்னை: 

வேலை நிறுத்த்த்தில் ஈடுபட்டுள்ள அரசு போருக்குவரத்து ஊழியர்களுக்கு,  உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விளக்கம் கேட்டு போக்குவரத்து துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஓய்வூதிய பலன்களை உடனடியாக அளிக்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், பொது மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

வேலை நிறுத்தத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்த  சென்னை உயர்நீதிமன்றம், “போராட்டத்தில் ஈடுபட, போக்குவரத்து கழக தொழிலாளர்கள், குறிப்பாக, ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு, தடை விதிக்கப்படுகிறது. போராடும் ஊழியர்கள், உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். பணிக்கு வராமல், கடமையை செய்யாமல், எந்த ஊழியராவது இருந்தால், விளைவுகளை சந்திக்க வேண்டியது, அவர்களைப் பொறுத்தது. பணி நீக்கம் அல்லது அபராதம், நீதிமன்ற அவமதிப்பு ஆகியவையும் அடங்கும்” என்று உத்தரவிட்டது.

ஆனாலும் ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி பணிக்கு திரும்பாத ஊழியர்களுக்கு போக்குவரத்து துறை சார்பில் இன்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. “நாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.