பெங்களூரு: பாரத ரத்னா விருது பெற்ற பிரபல விஞ்ஞானி பேராசிரியர் சி.என்.ஆர். ராவுக்கு, வாக்காளர் பட்டியலில் பெயர் தொடர்பான முரண்பாடு இருப்பதாகக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

92 வயதான சி.என்.ஆர். ராவ், பாரத ரத்னா விருது பெற்றவர்களில் ஒருவராவார். இந்த விருதைப் பெற்ற மூன்றாவது விஞ்ஞானியும் அவர்தான்.

‘பெயரில் முரண்பாடு’

சி.என்.ஆர். ராவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதற்கான காரணமாக “சுய பெயர் முரண்பாடு” (Self-name mismatch) குறிப்பிடப்பட்டுள்ளது.

2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் “Prof. C.N.R. Rao” என்று இடம்பெற்றுள்ளது. ஆனால் தற்போதைய வாக்காளர் பட்டியலில், “Prof.” என்பதில் கூடுதலாக ஒரு ‘f’ சேர்ந்து “Proff. C.N.R. Rao” என அவரது பெயர் பதிவாகியுள்ளது.

SIR எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது, 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர் ஒருவர், அந்தப் பட்டியலில் உள்ள தனது விவரங்களைப் பயன்படுத்தி SIR கணக்கெடுப்பு படிவத்தைப் பூர்த்தி செய்கிறார். ஆனால் 2002-ம் ஆண்டு பட்டியலில் உள்ள விவரங்களுக்கும் தற்போதைய வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களுக்கும் இடையே வேறுபாடு இருந்தால், அது ‘Self-mismatch’ எனக் கருதப்படுகிறது.

விசாரணைக்கு நேரில் ஆஜராக அழைப்பு

நோட்டீஸ் பெறும் நபர் மட்டுமே விசாரணைக்கு நேரில் ஆஜராக அனுமதிக்கப்படுவதால், பேராசிரியர் சி.என்.ஆர். ராவும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம் (IISc) அருகே, மல்லேஸ்வரம் பகுதியில் இந்த விசாரணை நடைபெற உள்ளது.

ஆனால், பேராசிரியர் ராவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவரம் குறித்து அவரது நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்கள், ‘தி இந்து’ தொடர்பு கொண்ட பிறகுதான் அறிந்துள்ளனர்.

அவர் உடல்நலம் சரியில்லாமல் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜக்கூரில் உள்ள ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் (JNCASR) அதிகாரிகள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், பேராசிரியர் ராவ் செல்போனை அதிகமாகப் பயன்படுத்துவதில்லை. அரிதாகவே தொலைபேசியில் பேசுவார். மின்னஞ்சலையும் அவரே பார்ப்பதில்லை. செல்போன் மற்றும் கணினி போன்றவை தனது கவனத்தைச் சிதறடிப்பதாக அவர் கருதுவதாகவும் தெரிவித்தனர்.

அறிவியல் துறையில் சாதனை

திடநிலை வேதியியல் (Solid-state Chemistry) மற்றும் கட்டமைப்பு வேதியியல் (Structural Chemistry) துறைகளில் பேராசிரியர் சி.என்.ஆர். ராவ் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

தனது துறையில் கிடைக்கக்கூடிய பெரும்பாலான முக்கிய விருதுகளையும் பெற்றுள்ள மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக அவர் கருதப்படுகிறார். அவருக்கு கிடைக்காத மிகப்பெரிய விருது நோபல் பரிசு மட்டுமே.

பிரதமர்களின் அறிவியல் ஆலோசனைக் குழுவில் முக்கிய பங்கு

நாட்டின் அறிவியல் கொள்கைகளை உருவாக்குவதிலும் பேராசிரியர் ராவ் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அறிவியல் ஆலோசனைக் குழுவிலும் அவர் உறுப்பினராக இருந்துள்ளார்.

அதன்பின்னர், ராஜீவ் காந்தி, எச்.டி. தேவகவுடா, ஐ.கே. குஜ்ரால் மற்றும் மன்மோகன் சிங் ஆகிய நான்கு பிரதமர்களின் அறிவியல் ஆலோசனைக் குழுக்களுக்கும் அவர் தலைமை வகித்துள்ளார்.

உலக அளவில் அறிவியல் துறைக்கு பேராசிரியர் ராவ் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ளார். குறிப்பாக பெங்களூருவின் அறிவியல் வளர்ச்சியிலும் அவரது பங்கு முக்கியமானது.

இந்திய அறிவியல் கழகத்தின் (IISc) தலைவராக பணியாற்றிய அவர், ஜக்கூரில் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தை (JNCASR) நிறுவியவர்களில் முக்கியமானவர். அந்த நிறுவனத்தின் முதல் தலைவராகவும் அவர் பணியாற்றினார்.

பாரத ரத்னா விருதுடன், பத்ம விபூஷண், பத்மஸ்ரீ, கர்நாடக ரத்னா உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளையும் பேராசிரியர் சி.என்.ஆர். ராவ் பெற்றுள்ளார்.

– நன்றி The Hindu