சென்னை:
உலகப்புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். தனது பேஸ்புக் பக்கத்தில், ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய ஒலிம்பிக் வீரர்களை ஊக்கமூட்டும் வகையில் வாழ்த்து செய்தி வெளியிட்டு உள்ளார்.
மனதையும், ஆற்றலையும் ஒருமுகப்படுத்தி செயல்பட்டால் உலகில் எதுவும் சாத்தியமே என்று கூறியுள்ளார்.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் அடுத்த மாதம் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. இந்திய அணியின் நல்லெண்ணத் தூதர்களாக இந்தி நடிகர் சல்மான் கான், துப்பாக்கிச்சூடும் வீரர் அபினவ் பிந்த்ரா, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஒலிம்பிக்கில் விளையாட செல்லும் வீரர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் உற்சாகமாக வாழ்த்து கூறியிருக்கிறார்.
வாழ்த்து செய்தியின் விவரம்: உலகின் சக்திவாய்ந்த நாடுகளெல்லாம் தங்களது நாட்டை வழிநடத்த சிறந்த தலைவர் இல்லாமல் தடுமாறி வருகின்றன. அந்த வகையில் நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நாட்டை வழி நடத்த வலுவான தலைவர்கள் கிடைத்துள்ளனர். ஒன்றுபட்டு, சக்தியை வெளிப்படுத்த இந்தியாவுக்கு இதுவே தக்க சமயம்.
நாட்டை வழிநடத்த தொலைநோக்கு பார்வையுடன் செயல்படும் தலைவர் நமக்கு கிடைத்திருப்பது இந்தியாவின் நற்பேறு. நமது மக்கள் தொகையில் 60 விழுக்காட்டினர் இளைஞர்கள். அத்தகைய ஒரு இளமையான மக்களைக் கொண்ட ஒரு நாடு இது.
தற்போது இளைஞர்கள் உலக விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு செயல்படுவது குறித்து மிக்க மகிழ்ச்சி. தேசிய விளையாட்டு வீரர்கள் தேர்வு திட்டம் சரியான திசையை நோக்கி பயணிக்கிறது.
ஒரு விஷயம் மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். மனதையும், ஆற்றலையும் ஒருமுகப்படுத்தி செயல்பட்டால் உலகில் எதுவும் சாத்தியமே. உறுதியாக, விடாப்பிடியாக முயற்சித்தலே அவசியமான குணம் ஆகும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த வருடம் இந்தியா சார்பில் 90 வீரர் வீராங்கணைகள் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள பிரேசில் செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.