மதுரை: காவல்துறையினர் மீது பொதுமக்கள் வழக்கு தொடர இனி அரசிடம் இருந்து முன் அனுமதி பெற தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான காவல்துறையினர் மீது தனிநபர் வழக்கு தொடர தமிழக அரசிடம் இருந்து முன் அனுமதி பெற தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள்மீது, அவர்களால் பாதிக்கப்படும் பொதுமக்கள், தனி நபர் வழக்கு பதிவு செய்ய வேண்டுமானால், மாநில அரசின் அனுமதி தேவை என்று கூறப்பட்டது. இதனால், அரசு அதிகாரிகள்மீது தனி நபர்கள் வழக்கு தொடருவதில் சிக்கல் எழுந்தது. இதுதொடர்பாக அவ்வப்போது வழக்குகள் விசாரிக்கப்பட்டு, நீதிமன்றம் அனுமதி வழங்கி வரும் நடவடிக்கைகள் தொடர்கதையாகி வருகின்றன.
ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் உயர்நீதிமன்றம் மதுரைகிளை, பொய் வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என நெல்லையைச்சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இதற்கு, அரசிடம் அனுமதி பெற வேண்டியதில்லை என்று கூறியது. இருந்தாலும், நடைமுறையில், அரசு அனுமதி தேவை என்ற கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில், முறைகேடுகளில் ஈடுபடும் காவல்துறையினர் மீது பொதுமக்கள் வழக்கு தொடர இனி அரசிடம் இருந்து முன் அனுமதி பெற தேவையில்லை என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது.
இந்த தொடர்பான மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.டி ஜெகதீஷ்சந்திரா, கே.ராஜசேர்கர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரசு பணிக்கு நியமிக்கப்பட்டவர்களை நியமன அதிகாரிதான் பணி நீக்கம் செய்ய முடியும். அதன்படி காவல்துறையினர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையிலானவர்களை போலீஸ் ஐ.ஜி போன்ற அதிகாரத்தில் உள்ள அதிகாரிகள் நியமிக்கிறார்கள், எனவே போலீஸ்காரர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை பணியில் இருப்பவர்களை நீக்கம் செய்யக்கோரி தனி நபர் வழக்கு தொடர முன் அனுமதி தேவையில்லை என்றார்.
இதையடுத்து, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், குற்றவியல் நடைமுறை சட்டம் 197-படி தனி நபர் வழக்கு தாக்கல் செய்ய அரசின் முறையான ஒப்புதல் பெற வேண்டும். அவர்களுக்கு சட்டப்படி பாதுகாப்பு இருக்கிறது என்று கூறினார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், காவல்துறை உயர் அதிகாரி ஒருவரால் துறைரீதியான நடவடிக்கை எடுக்க முடியும் என்று இருக்கும்போது காவல்துறையினர் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையிலானவர்களுக்கு குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 197 பெருந்தாது. எனவே அரசு நடவடிக்கை எடுக்ககூடிய பணி நிலையில் உள்ளவர்கள் மீது வழக்கு தொடர மட்டும் தான் அனுமதி பெற வேண்டும் என்பது பொருந்தும். எனவே போலீசார் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான காவல்துறையினர் மீது தனி நபர் வழக்கு தொடர முன் அனுமதி பெற தேவையில்லை என்று உத்தரவிட்டனர்.