சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மெரினா கடற்கரையில் நவம்பர் இறுதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான மெரினா கடற்கரை செல்ல பொதுமக்களுக்கு கடந்தர மார்ச் மாதம் தடை விதிக்கப்பட்டது. தற்போது மத்திய மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து சுற்றுலாத்தலங்கள், மால்கள், சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கிய நிலையில், மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டடு வருகிறது.
ண்டிகை காலம் நெருங்கி வருவதால், மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், மெரினா கடற்கரையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என பொதுநல வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், தற்போதைய நிலையில், நவம்பர் இறுதி வரையில் மெரினா கடற்கரை திறக்கப்படாது என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் , தமிழகத்தில் தியேட்டர்களே திறக்கப்பட்டு விட்ட நிலையில் கடற்கரையை திறக்க தாமதம் காட்டுவது ஏன் என்றும் அதில் என்ன சிரமம் என்றும் கேள்வி எழுப்பினர்.
மேலும், இது தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிடாவிடில் நீதிமன்றமே மக்களுக்கு அனுமதி வழங்கும் என நீதிபதிகள் காட்டமாக தெரிவித்துள்ளனர்.