டில்லி,
சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட். மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர். இவர் பெயரில், மத்திய பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமானத்தில் டில்லிக்கு எந்த தேதியில் வேண்டுமானாலும் ‘பிசினஸ்’ வகுப்பில் பயணிப்பதற்கு டிக்கெட் எடுக்கப்பட்டு இருந்தது.
திடீரென அவர், நேற்று காலை மராட்டிய மாநிலம் புனேவில் இருந்து டில்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில்தான் சென்றாக வேண்டும் என்று அடம்பிடித்துள்ளார்.
அந்த விமானத்தில் எகனாமி இருக்கைகள்தான் உள்ளன என்று அதிகாரிகள் கூறியுள்ளனர. இருப்பினும், வேறு வழியின்றி அதில் பயணம் செய்தார்.
டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கிய பிறகும், விமானத்தை விட்டு அவர் இறங்காமல் அமர்ந்திருந்தார். சமாதானம் செய்யவந்த விமான நிலைய அதிகாரியை செருப்பால் அடித்தார்.
அடித் தோடு தனது செருப்பால், மேலாளரின் கன்னத்தில் மாறி மாறி 25 தடவை அடித்ததாக ஊடகங்களுக்கு பெருமையாக பேட்டி அளித்தார். பாஜக எம்பிக்களைப்போல் அமைதியாக இருக்கமாட்டேன் என்றும் கூறினார்.
இந்நிலையில் சிவசேனா எம்பி ரவிந்திரகெய்க்வாட் விமானத்தில் பயணம் செய்ய தடைசெய்ய இந்திய விமான நிறுவனங்கள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள உத்தவ் தாக்கரே, வன்முறையை சிவசேனா பொறுத்துக்கொள்ளாது என்று கூறியுள்ளார்.