சென்னை கே.கே நகரில் அமைந்துள்ள பத்மா சேஷாத்திரி பால பவன் தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகள், தங்களின் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகப் புகார்கள் அளித்துள்ளனர்.

இதையடுத்து அவர் தற்போது போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கிறார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ’96’ பட நடிகை கௌரி தான் படித்த அடையார் ஹிந்து பள்ளியில் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக சமூகவலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.

அதில்… நான் படித்தபோது ஆசிரியர்கள் சிலர், மாணவ, மாணவிகளை அசிங்கமாகப் பேசுவது, சாதியை வைத்துப் பேசுவது, மிரட்டுவது, உடல் அமைப்பைக் கிண்டல் செய்வது, நம் குணாதிசயத்தைக் கேவலப்படுத்துவது, ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளை மாணவ, மாணவியர் மீது சுமத்துவது போன்ற கொடுமைகளை நான் மட்டுமல்லாது என்னுடன் படித்த அனைவரும் எதிர்கொண்டனர். எனவே அப்பள்ளியில் தற்போது படிக்கும் மாணவிகள் இது போன்ற பிரச்சனைகளை நீங்கள் இன்னமும் அனுபவித்தால் தயங்காமல் தெரிவியுங்கள். உங்களின் பெயர்களை வெளியே சொல்லாமல் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வழி செய்கிறேன்” எனக் கூறியிருந்தார்.

நண்பர்களின் கசப்பான அனுபவங்களை பகிர்ந்த இடத்தில், தான் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக ஊடகங்களில் தவறாகக் குறிப்பிட்டிருப்பதாக, அதனை தற்போது தெளிவுப்படுத்தியிருக்கிறார் கெளரி.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், ”நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனக்கு பாலியல் ரீதியான எந்த துன்புறுத்தலும் நடக்கவில்லை. ஊடகங்கள் பிஎஸ்பிபி பள்ளியுடன் என்னை தவறாக இணைக்கிறார்கள். இதனை இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.