டில்லி :
சிபிஐ இயக்குனர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் நேரத்தின்போது அந்தமான் போர்ட் பிளேயருக்கு மாற்றம் செய்யப்பட்ட சிபிஐ அதிகாரி ஏ.கே.பாஷிக்கு சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 24ந்தேதி அவரை இடம் மாற்றம் செய்த நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஏ.கே.பாஷி இன்னும் பணியை ஏற்கவில்லை. இந்த நிலையில், அவருக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
சிபிஐ அதிகாரிகளாக இருந்த அலோக்வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோருக்கு இடையே லஞ்ச முறைகேட்டில் பணம் பெற்றதாக ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில அனுப்பியது. அப்போது, இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவை மத்திய அரசு நியமித்தது.
அவர் பொறுப்பு ஏற்றதும், அலோக் வர்மாவால் நியமிக்கப்பட்ட ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச புகாரை விசாரித்து வந்த குழுவை சேர்ந்த ஏ.கே.பாஷி உள்பட 12 சிபிஐ அதிகாரிகளை பட இடங்க ளுக்கு மாற்றி உத்தரவிட்டார். அப்போது பாஷி அந்தமான் போர்ட்பிளேருக்கு மாற்றப்பட்டார்.
இதற்கிடையில், போர்ட் பிளேருக்கு இடம் மாற்றம் செய்யப்பட்ட ஏ.கே.பாஷி அங்கு பணியை ஏற்றுக்கொள்ளாத நிலையில், அவர் கடந்த சில மாதங்களாக சம்பளமும் பெற்றுக்கொள்ள வில்லை என்று கூறப்படுகிறது.
தனது மாற்றத்தை எதிர்த்து, சிபிஐ அதிகாரி ஏ.கே.பாஷி தொடர்ந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ஏ.கே.பாஷி சிறிது நாட்கள் போர்ட் பிளேரிலேயே இருக்கட்டும் என கூறி வழக்கை ஒத்தி வைத்துவிட்டார்.
இந்த நிலையில் வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் நடைபெற்றது. அப்போது மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் கூறியதாவது, பாஷி மாற்றப்பட்டதை தொடர்ந்து, அவர் அங்கு பணியில் சேரவில்லை… அதே வேளையில், அக்டோபர் மாதத்தில் இருந்து பாஷி தனது சம்பளத்தை பெற்றுக் கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.
விசாரணையின்போது, ராகேஷ் அஸ்தானா மீதான குற்றச்சாட்டு குறித்து யார் விசாரித்து வருகிறார்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இதுகுறித்து பதில் அளிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டு வழக்கை மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைத்தது.