டெல்லி: நாட்டின் பொதுஉடைமை சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் ராணுவ வீரர்கள் ஆவதற்கு தகுதியற்றவர்கள் என முன்னாள் ராணுவதளபதி விபி மாலிக் கருத்து தெரிவித்துள்ளார். மத்தியஅரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக வடமாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் ராணுவ தளபதி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

மத்தியஅரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்துக்கு பீகார், உ.பி., தெலுங்கானா உள்பட பல மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த போராட்டத்தின்போது, பல ரயில்கள் எரிக்கப்பட்டு வருகின்றன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  கார்கில் போரில் இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுத்தந்த ராணுவ தளபதி விபி மாலிக் தற்போது ஒய்வு  பெற்றுள்ள நிலையில், இளைஞர்களின் போராட்டத்தை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,  “ராணுவம் என்பது தன்னார்வப் படை. அது ஒன்றும் நலவாரியம் அல்ல. அதில் இருப்பவர்கள் அனைவரும் தேசத்துக்காக போராடும் சிறந்த வீரர்களாக இருக்க வேண்டும். தேசத்தைப் பாதுகாப்பவர்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர்,

தற்போது அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து, வன்முறையில் ஈடுபட்டு ரயில்கள், பேருந்துகளை எரித்து சேதத்தை ஏற்படுத்துபவர்கள் ராணுவத்தில் சேர தகுதியற்றவர்கள். அவர்கள் தேசநலனுக்கு எதிரானவர்கள் என்று காட்டமாக தெரிவித்து உள்ளார்.

ராணுவத்தில் ஆள் சேர்ப்புக்கு புதிய நடைமுறையை அறிவித்துள்ளதால் சிலருக்கு வயது வரம்பு மீறியிருக்கலாம். ஆனால், அதை மத்தியஅரசு  நிச்சயமாக பரிசீலிக்கும் என்றவர்,  ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணி என்பதால் உயர் தொழில்நுட்ப சேவைகளில் இருப்போரை விரைவில் வெளியேற்ற நேரிடுமே என்று நினைப்பதைவிட அடுத்து வருபவர்கள் இன்னும் நவீன தொழில்நுட்பங்களைக் கற்றறிந்து வருவார்கள் என்றே பார்க்க வேண்டும்.

இவ்வாறு  கூறினார்.