சென்னை:
முழு  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள 4 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்படாது என்று தமிழக மின்வாரியம் அறிவித்து உள்ளது.

ஊரடங்கு காரணமாக, வாழ்வதாரம் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள்  மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. ஆகவே தமிழகம் முழுவதும் ஜூலை 31ம் தேதி வரை மின் கட்டண வசூல் நடவடிக்கைகளை தள்ளி வைக்க கோரி வழக்கறிஞர் ராஜசேகர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது தமிழக மின்வாரியம் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. வழக்கு இன்று நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு  தரப்பில்  பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், முழு  ஊரடங்கு அமல்படுத்தப்படும்  சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் ஜூன் 15க்கு மேல் நீட்டிக்கப்படாது என தமிழக மின்வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதனை வழக்கில் வரும் திங்கட்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.